சனி, 21 மே, 2011
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:அதிகாரி தகவல்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ரவீந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10&ம் வகுப்பு தோல்வி, அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து, தொடர்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-4-11 முதல் 30-6-11-ம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31-3-11 தேதியன்று 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்களுடன் அலுவலக வேலை நாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து மே மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற வேண்டுமானால் அவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி 31-3-11 வரையான காலத்திற்கு உதவித்தொகை பெறும் பயனாளிகள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு சுயஉறுதிமொழி ஆவணத்தை அதற்குரிய படிவத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை வங்கியில் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க தேவையில்லை. மாற்று திறனாளிகளை பொறுத்தவரை பதிவு செய்து 31-3-11ந்தேதியுடன் ஒரு ஆண்டு முடிவு பெற்று இருக்க வேண்டும்.மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக