ஞாயிறு, 19 ஜூன், 2011
கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள இந்தியர் பட்டியல் வெளியிட சுவிஸ் முடிவு
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள இந்தியர் உட்பட வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை பெறுவது இனி சுலபம். இது தொடர்பான இரட்டை வரிவிதிப்பு சட்டத் திருத்தத்துக்கு சுவிஸ் அரசின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாத பல ஆயிரம் கோடி பணத்தை கறுப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளும், அன்னா ஹசாரே மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், கறுப்பு பணத்தை மீட்பதில் மெத்தனமாக இருப்பதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுவிஸ் அரசுடன் இதுபோன்ற ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள போதிலும் வங்கி டெபாசிட் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை பெற முடியாத நிலை இருந்தது. இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தத்தில் சட்டத் திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சுவிஸ் மத்திய வங்கியின் உயர் அதிகாரி மிச்சலின் கால்மிரே இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் அடிப்படையில், சட்டத் திருத்தம் செய்வதற்கு சுவிஸ் நாடாளுமன்ற குழு கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது. இதன்படி, சுவிஸ் அரசு இரட்டை வரிவிதிப்பு தொடர்பான சட்டத்தில் சில திருத்தங்களை செய்துள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது அமலுக்கு வந்தால், சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தருவது கட்டாயமாகும். இதனால், சுவிஸ் அரசுடன் ஏற்கனவே இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களை செய்துள்ள இந்தியா, ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஸகஸ்தான் மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகள் பயன் பெறும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி செலுத்தி இருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டுவரும்போது தாய்நாட்டில் வரி செலுத்தத் தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக