புதன், 29 ஜூன், 2011
தக்கலை அருகே பெட்ரோல் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
மதுரையில் இருந்து தேங்காய்பட்டணம் நோக்கி நேற்றிரவு ஒரு டேங்கர்லாரி வந்து கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் அந்த லாரி வந்தபோது எதிரே விறகு பாரம் ஏற்றி கொண்டு வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் டேங்கர் லாரி ரோட்டோரமாக கவிழ்ந்தது. மேலும் டேங்கரில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டையில் இருந்து ஒழுகிய பெட்ரோல் நடுரோட்டில் ஆறாய் ஓடியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெட்ரோல் வாடை வீசியது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தக்கலை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலு வலர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
மேலும் இன்று காலை டேங்கர் லாரியை மீட்க ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் நாகர்கோவிலில் இருந்து மாற்று டேங்கர் லாரி ஒன்றும் வரவழைக்கப்பட்டது. அதன் பின்பு விபத்துக்குள்ளான டேங்கரில் மீதி இருந்த பெட்ரோல் உறிஞ்சப்பட்டு மாற்று டேங்கர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராமநாதபுரத்தை சேர்ந்த நரசிங்கம், கிளினர் கோவில்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்கள் 2 பேரையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:
கருத்துரையிடுக