திங்கள், 18 ஜூலை, 2011
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டுக்கு தமிழக அரசு ஒத்திவைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தனது தீர்ப்பை அறிவித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும்.
- 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
- சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக அரசு கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம்.
- சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
- தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக