ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் உலகிலேயே முதல் முறையாக அணுகுண்டு வீசப்பட்டதன் 64-வது நினைவு தினம் நேற்று அந்த நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நகர மேயர், அணுகுண்டு இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1945-ம்ஆண்டு ஆகஸ்டு மாதம்
2-ம் உலகப்போர் நடந்தபோது, அமெரிக்காவும், ஜப்பானும் எதிர்எதிர் முகாம்களில் இருந்தன. ஜெர்மனியின் நட்பு நாடாக இருந்த ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகர் மீது 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி காலை 8.15 மணிக்கு அமெரிக்க போர் விமானம் அணுகுண்டை வீசியது.
உலகிலேயே முதன்முதலாக அப்போது தான் அணுகுண்டு வீசப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியானார்கள். குண்டு வீசப்பட்ட உடனேயே பலியானவர்கள், அதை தொடர்ந்து ஏற்பட்ட கதிரியக்கம் காரணமாக பலியானவர்கள் என்று மொத்தம் ஒரு லட்சத்து 40ஆயிரம் பேர் பலியானார்கள்.
நாகசாகியிலும்
இது நடந்து 3 நாட்கள் கழித்து நாகசாகி நகரில் மேலும் ஒரு அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இதில் 70 ஆயிரம் பேர் பலியானார்கள்.
இந்த 2 சம்பவங்களுக்கு பிறகு ஆகஸ்டு 15-ந்தேதி ஜப்பான் சரண் அடைந்தது. அது முதல் ஜப்பான் அமைதி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அதன்பிறகு அமெரிக்காவின் நெருங்கி நட்பு நாடாகவும் மாறிவிட்டது.
50 நாடுகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி
ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 64-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 50 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஜப்பான் பிரதமர் டாரோ அசோ கலந்து கொண்டார். ஹிரோஷிமா நகர மேயர் டடாடோஷி அகிபாவும் கலந்து கொண்டார்.
அணுகுண்டு வீசப்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்ட அமைதி நினைவு பூங்காவில் அனைவரும் திரண்டு இருந்தனர். அணுகுண்டு வீசப்பட்ட அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு திரண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடித்தனர்.
அணுஆயுதம் இல்லாத உலகம்
அதன்பிறகு பேசிய மேயர் அகிபா, அணுஆயுதம் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதை உருவாக்குவதற்கான பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அணுஆயுதங்களை அழிக்க வேண்டும் என்பது அணுகுண்டு வீசப்பட்டதில் தப்பி பிழைத்தவர்களின் ஆசை மட்டும் அல்ல, பூமியில் உள்ள அனைவரின் விருப்பமும் அதுதான் என்றும் தெரிவித்தார்
0 comments:
கருத்துரையிடுக