குமரி மாவட்டத்தில் வேன்களுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையில் நடக்கும் போட்டி அன்றாடம் காட்சியாகும். அரசுப் பேருந்துகள் செல்லாத குக்கிராமங்களுக்கு இந்தத் தனியார் வேன்கள் ஒரு வரப்பிரசாதம் போன்று இயங்கி வந்தன. ஆனால், இவைகள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு முறையான உரிமம் எதுவும் அரசிடமிருந்து பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் குமரிமாவட்டத்தில் தனியார் மினி பேருந்துகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதற்குப் பின்னர் வேன்களுக்கும் மினி பேருந்துகளுக்குமிடையிலான போட்டி பல உயிர்களைப் பறித்துள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்காக போட்டியிடும் மினி பேருந்து மற்றும் வேன்களுக்கு இடையிலான போட்டி, பேருந்து வசதியில்லா குக்கிராம மக்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருந்த போதிலும் இவைகளுக்கு இடையிலான தொழில் போட்டி மக்களுக்குப் பல பிரச்சனைகளையும் தந்துள்ளது. அரசு உரிமம் பெற்ற மினி பேருந்துகளுக்குப் போட்டியாக எவ்வித உரிமமும் இன்றி இயக்கப்படும் வேன்களால் பாதிக்கப்பட்டவர்களில் மினி பேருந்து உரிமையாளர்களும் அடங்குவர். தொடர்ந்து வேன்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் உரிமம் இன்றி முறைகேடாக இயக்கப்பட்ட வேன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார், மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை, குளச்சல் உட்பட பல இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அரசு உரிமம் இன்றி முறைகேடாக இயக்கப்பட்ட சுமார் 63 வேன்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவட்டார் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட சுமார் 25 வேன்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றி வந்த வேன்கள் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவ-மாணவிகளை பள்ளியில் இறக்கிவிட்ட பின்பு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் அப்பகுதியினை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியது. இதற்கிடையில் காலையில் வேன்களில் வந்த மாணவ-மாணவிகள் மாலையில் வீடு திரும்ப போதிய வாகன வசதியின்றி தவித்தனர்.
இதே போன்று குளச்சல், நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, வெள்ளிச்சந்தை, திருவிதாங்கோடு, தக்கலை போன்ற இடங்களில் நடத்திய சோதனைகளில் சுமார் 20 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வேன்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் வேன்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக குமரி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.ராஜகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசும் பொது,
"குமரி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வேன் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேன்களில் பொதுமக்கள் தான் பயணம் செய்கிறார்கள். இந்த வேன் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போலீசாரால் வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தி வேன்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.
முறைகேடாக இயக்கப்படும் தனியார் வேன்களால் அரசு மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள தனியார் மினி பேருந்துகளுக்கு இழப்பு ஏற்படுவது உண்மையே. அதே போன்று பயணிகளை ஏற்றுவதற்காக போட்டியிட்டு அதி வேகத்தில் இயக்கப்படும் சில வேன்களால் பொதுமக்களில் பலரின் உயிர் போகும் சம்பங்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், போதிய வாகன வசதியில்லாத குக்கிராமங்களிலுள்ள மக்களுக்கு இந்த வேன்களால் மிகுந்த பயன் விளைவதையும் மறுக்க இயலாது. அதே போன்று காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவி, பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேருவதற்கும் இந்த வேன்கள் மிகுந்த பயனாக உள்ளன.அதே போன்று இந்த வேன் ஓட்டும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளதும் மறுக்க இயலாது.
இவை அனைத்தையும் முறையாக பரிசீலித்து, மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இவ்வாறு தனியாக இயக்கப்படும் வேன்களை முறைபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அதுவே குமரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்துமா?
0 comments:
கருத்துரையிடுக