செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. கட்டணம் குறைகிறது பிரீபெய்டு கார்டுகளை உபயோகிக்கலாம்
உள்நாட்டில் டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்களை தவிர நீண்ட தூரத்துக்கு போன் அழைப்புகளை வழங்கும் 25 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
பவர்கிரிட், ரயில்டெக், கெயில், சிபி, ஏடி அண்ட் டி, பிரிட்டிஷ் டெலிகாம், கேபிள் அண்ட் வயர்லெஸ், சிங்டெல், வெரிசான், பிரான்ஸ் டெலிகாம் (ஆரஞ்சு) மற்றும் துலிப் டெலிகாம் ஆகியவை இந்த நிறுவனங்களில் சில. இவை சர்வதேச அளவில் இணைப்புகளை தரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இவற்றின் உதவியுடன் சில உள்ளூர் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இந்நிறுவனங்கள் பிரீபெய்டு எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., கார்டுகளை வெளியிட அனுமதி வேண்டும் என்று நீண்டக்காலமாக தொலைத் தொடர்புத்துறையிடம் கேட்டு வந்தன. இந்நிலையில், இப்போது இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, இந்நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது வேறு நிறுவனங்கள் மூலமாகவோ கார்டுகளை விற்கலாம்.
அதாவது ஒருவர் ஏர்டெல் அல்லது வோடபோன் இணைப்பு பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தான் வாங்கிய பிரீபெய்டு கார்டு நிறுவனத்தின் இலவச எண்ணை அழுத்திவிட்டு, ரகசிய எண்ணையும், எஸ்.டி.டி. எண்ணையும் அழுத்தினால் இணைப்பு கிடைக்கும். பிரீபெய்டு மதிப்பு தீரும் வரையில் இதுபோன்று பேசலாம். இதற்காக ஏர்டெல் அல்லது வோடபோனுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
நீண்ட தூர அழைப்புகளுக்கான லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் பிற நிறுவனத்துடன் சேர்ந்து இச்சேவையை அளிக்க வேண்டிய நிலை இல்லாததால், குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை தர முடியும். எனவே, இவ்விரு அழைப்புகளின் கட்டணமும் பெருமளவில் குறையும்.
Labels:
செய்திகள்,
தொலை தொடர்பு,
STD-ISD
0 comments:
கருத்துரையிடுக