வியாழன், 27 ஆகஸ்ட், 2009
குமரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும் இடங்கள் அறிவிப்பு
குமரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே விநாயகர் ஊர்வலம் செல்லவேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் இடங்கள், பாதைகள், விஜர்சனம் செய்யும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு சிவசேனா சார்பில் நாகராஜா திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, மாந்தாரம்புதூர், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரியை அடைந்து அங்கு கரைக்கப்படுகிறது.
இதைப்போல் 29ம் தேதி இந்துமகா சபா, இந்து மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை சார்பில் நாகராஜா திடலில் இருந்து பகல் 1 மணிக்கு துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், பீச் ரோடு, மதுசூதனபுரம், பறக்கை, தெங்கம்புதூர் வழியாக சொத்தவிளை பீச்சை அடைகிறது. அன்று காலை 9 மணிக்கு இந்துமுன்னணி, பா. ஜனதா ஆகியவை சார்பில் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மணவாளக்குறிச்சி சந்திப்பில் தொடங்கி வடக்கன் பாகம், தருவை, பிள்ளையார் கோவில், பாபுஜி தெரு, செங்குழி வழியாக சின்னவிளை பீச்சை அடைகிறது.
30ம் தேதி பகல் 2 மணிக்கு இந்து முன்னணி, மற்றும் பா.ஜனதா சார்பில் நாகராஜா திடலில் இருந்து துவங்கும் ஊர்வலம் சவேரியார் கோவில் சந்திப்பு, இடலாக்குடி, பட்டாரியார் தெரு, பிள்ளையார்புரம், சியோன்புரம், மேலகிருஷ்ணன் புதூர் வழியாக சங்குத்துறை கடற்கரையை அடைந்து அங்கு கரைக்கப்படுகிறது. இதைப்போல் 30ம் தேதி பகல் 2 மணிக்கு சுசீந்திரத்தில் துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் வழுக்கம்பாறை, மந்தாரம்புதூர், அச்சன்குளம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரியில் கரைக்கப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு சியாம் பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை சார்பில் பார்வதிபுரத்தில் இருந்து துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், மந்தாரம்புதூர், அச்சன்குளம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரியை அடைகிறது.
30ம் தேதி இந்து முன்னணி, மற்றும் பாரதீய ஜனதா ஆகியவை சார்பில் பகல் 2 மணிக்கு தோவாளையில் இருந்து துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் ஆரல்வாய்மொழி, மாதவலாயம், தெள்ளாந்தி ஞானம், திட்டுவிளை வழியாக பள்ளிகொண்டானை சென்றடைந்து அங்கு விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதைப்போல் அன்று பகல் 1 மணிக்கு திங்கள்சந்தையில் இருந்து துவங்கும் விநாயகர் ஊர்வலம் செட்டியார் மடம், கல்லுக்கூட்டம், லட்சுமிபுரம், பருத்திவிளை வழியாக மண்டைக்காடு வெட்டுமடையில் சென்று அங்கு கரைக்கப்படுகிறது.
30ம் தேதி பகல் 1 மணிக்கு இந்து முன்னணி, மற்றும் பா. ஜனதா சார்பில் கூனாலுமூடுவில் துவங்கும் விநாயகர் ஊர்வலம் கூணாலுமூடு, பாலூர், தொழிக்கோடு, மங்கலகுன்று, தேவிக்கோடு, உதயமார்த்தாண்டம் வழியாக மிடாலத்தில் கரைக்கப்படுகிறது. இதைப்போல் பகல் 2.30 மணிக்கு அஞ்சுகண்ணு கலுங்கில் துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் புதுக்கடை வழியாக தேங்காப்பட்டணம் சென்று அங்கு கடலில் கரைக்கப்படுகிறது.
இதைப்போல் பகல் 12 மணிக்கு வைகுண்டபுரத்தில் துவங்கும் விநாயகர் சிலை ஊர்வலம் தக்கலை, இரணியல், திங்கள் நகர், லட்சுமிபுரம், பருத்திவிளை வழியாக மண்டைக்காடு வெட்டுமடையில் சென்று அங்கு கரைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு குலசேகரம் செருப்பாலூரில் துவங்கும் விநாயகர் ஊர்வலம் திருவட்டார், கானல் ஸ்தலம், குலசேகரம் வழியாக திற்பரப்பு சென்று அங்கு கரைக்கப்படுகிறது. இதைப்போல் பகல் 2 மணிக்கு மேல்புறத்தில் துவங்கும் ஊர்வலம் குழித்துறை, வெட்டுவன்னி சந்திப்பு வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது. பகல் 2.30 மணிக்கு பம்மத்தில் துவங்கும் ஊர்வலம் வெட்டுவண்ணி வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
விஷத்தன்மை கொண்ட ரசாயனக்கலவை கொண்ட சிலைகளை கரைக்கக்கூடாது. அனுமதித்த பாதைகளின் வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகிக்க கூடாது. குறித்த உயரத்திலான சிலைகள் மட்டுமே எடுத்து செல்லவேண்டும். ஆட்சேபகரமான கோஷங்கள் ஊர்வலத்தில் எழுப்பக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாவண்ணம் சட்டம், மற்றும் ஒழுங்கு பராமரிக்க மாவட்ட நிர்வாகத்ல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.
Labels:
குமரி மாவட்டம்,
விநாயகர் ஊர்வலம்
0 comments:
கருத்துரையிடுக