செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
வக்பு வாரியத்தில் நடந்த ஊழல்: அப்துல் ரகுமான் புகார்
வக்பு வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக, அதன் தலைவர் அப்துல் ரகுமான் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தற்போது கையில் இருக்கும் நிலம் குறைவு தான்; இதிலும், பெரும் பகுதி, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் நிலம், சமுதாயக் கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். முஸ்லிம் சமுதாய மக்களில் சிலர், தலித்தை விட கல்வியில் கீழே உள்ளனர். கல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். மீட்கும் நிலத்தில், பள்ளி, கல்லூரி மாணவியருக்கான விடுதி, தொழிற்பயிற்சி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இலவச மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள், வக்பு வாரியத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன. முதல் வகுப்பு முதல், கல்லூரி வரை சிறுபான்மை கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வக்பு வாரியத்தில் அதிக ஊழல் நடந்துள்ளது. அதனால் வர வேண்டிய வருவாய் வரவில்லை. இப்பிரச்னைகளைத் தீர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதற்காக விடுமுறை நாட்களில் கூட தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 25 கிரவுன்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த அருணா கார்டன் இடம் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வக்பு வாரியத்துக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் வழங்குகிறது. சென்றாண்டு பள்ளிவாசல், தர்காக்கள் மூலம் 2.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஆக்கிரமிப்பாளரிடமே வாடகை வசூலித்து நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளோம். ஸ்பான்சர்கள் நிதி வழங்க முன் வருகின்றனர். மாநில அரசு, ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். வக்பு வாரியத்தில் நடந்த ஊழலுக்கு ஆதாரம் இல்லை. அதற்கான ஆதாரம் தேடுகிறேன். கிடைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அப்துல் கூறினார்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்கள்,
வக்ஃபு வாரியம்
0 comments:
கருத்துரையிடுக