ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

3 வாரத்தில் 4 பூகம்பம் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம்

அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மற்றும் திரிபுராவில் கடந்த மூன்று வாரங்களில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடான மியான்மரிலும் இது உணரப்பட்டது. பெரிய பூகம்பம் எந்த நேரத்திலும் ஏற்படும் என்ற பீதியில் மக்கள் பதற்றம் அடைந்துள்ள்னர்.
ஆகஸ்ட் 19ல் 4.9 ரிக்டர் அளவிலும், ஆகஸ்ட் 11ல் 5.6 ரிக்டர் அளவிலும், கடந்த திங்கட்கிழமை 5.3 ரிக்டர் அளவிலும், வெள்ளிக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் அதிர்ந்தன.
கவுகாத்தி பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் சூர்யா சர்மாக் கூறுகையில், பூகம்பத்தை யூகிக்க முடியாது என்றாலும் நாங்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வடகிழக்குப் பிராந்தியத்தில் பெரிய பூகம்பம் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது என்றார்.
பெரிய பேரிடரை சந்திக்க நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது என்று கவுகாத்தியில் அருண் மகாந்தா என்ற டாக்டர் கூறினார்.
பூகம்பம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை விளக்கி இந்த மாநிலங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
7 வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலாயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகியவை உலகில் பூகம்பத்தில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள 6வது பெரிய பிராந்தியமாக புவியியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 1897ல் இந்த பிராந்தியத்தில் 8.7 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டு 1,600 பேர் உயிர் இழந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக