வியாழன், 17 செப்டம்பர், 2009

சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்.-ராமதாஸ்


எந்த விசாரணையும் இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாம் சமுதாயத்தினரை விடுவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
நபிகள் நமக்கு சொன்ன அறிவுரை ஒட்டுமொத்த மனித இனத்திற்கானது. இஸ்லாமிய சமுதாயம் எந்த துன்பமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ நாம் அனைவரும் நினைக்கிறோம்.
தமிழகத்தில், வன்முறைக்கு இடம் இல்லாமல் அமைதி பூங்காவக திகழக்கூடிய நாடு என்று நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். அதன்படியே நாமும் அந்த வழிகாட்டுதல்படி, சமூக விரோத செயல்கள் எங்கிருந்து வந்தாலும் அதை கண்டிக்கின்ற முதல் ஆளாக இருக்கிறோம்.
பல ஆண்டு காலம் எந்த விசாரணையும் இன்றி சிறையில் வாடுகின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயம் விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வைக்கிறோம். தவறு செய்யாமலே பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள இஸ்லாம் சமுதாயத்தினரை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட என்னை அழைத்தாலும் நான் வரத்தயார்.
ஹனிபா என்ற ஆட்டோ டிரைவர் 12 ஆண்டுகளாக அவர் மீது எந்த வழக்கும் இல்லாமல் சிறையில் இருக்கிறார். இவ்வாறே 10, 12 ஆண்டுகளாக எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது. அவர்களை விடுவிக்க முதல்-அமைச்சருக்கு கோரிகை வைப்போம்.
இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எல்லா நிலையிலும் உறுதுணையாக இருந்தது போலவே இந்த விஷயத்திலும் துணையாக இருப்போம். ஆம்பூர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எல்லா உதவிகளையும் செய்திட வேண்டும். இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது. இன்னும் உங்களுக்கு சில குறைகள் உள்ளன. அந்த குறைகளை நீக்க போராடுவோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.  

0 comments:

கருத்துரையிடுக