திங்கள், 26 அக்டோபர், 2009

குமரியில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் தனிப்பிரிவு அமைக்கப்படுமா? பெண்கள், மாணவிகள் எதிர்பார்ப்பு

குமரி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றை தடுக்க உடனடியாக மாவட்ட அளவில் தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.இணையதளங்கள், செல்போன்களின் அசூர வளர்ச்சி பல குற்ற செயல்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது. நவீன வசதிகளை பயன்படுத்தி பல சமூக விரோத செயல் கள் தாராளமாக தலை தூக்க தொடங்கி இருக்கின்றன. இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மையப்படுத்தி இந்த வகை யிலான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளன. ஆபாச எஸ்எம்எஸ்கள், மிரட்டல் இமெயில்கள் என பல நிலை களில் குற்றங்கள் பெருகி வருகிறது. இந்த வகை குற்ற செயல்களில் பாதிக்கப்படுகிறவர்கள் மாணவிகளாக அல்லது இளம்பெண்களாக இருப்பதால் புகார் தெரிவிப்பதில் தயக்கம் காட்டுவதும் குற்றவாளிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.பெருகி வரும் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு இல்லாததும் இவ்வகை குற்றங்களை அதிகரிக்க செய்துள்ளது. பஸ் நிறுத்தங்கள், சினிமா தியேட்டர்கள், ரயில் நிலையங்கள் என பொது இடங்களில் சர்வ சாதரணமாக காமிரா மொபைல் போன்கள் மூலம் மாணவி களை, இளம்பெண்களை பல கோணங்களில் படமெடுத்து வருவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு மொபைல் போன் கடை யில் போலீசார் அதிரடி யாக சோதனை நடத்தி னர். பல இளம்பெண்கள், மாணவிகளின் ஆபாச படங்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து படங்களுமே நவீன காமிரா செல்போன் மூலம் எடுக்கப்பட்டவை தான். இவை மெமரி கார்டுகளில் படமாக்கப்பட்டு செல்போன் மூலம் பரப்பி விடப்பட்டுள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட இளம்பெண்கள், மாணவிகளுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்ட படங்கள் தான் அதிகம்.இது போன்ற குற்றங்களை தடுப்பதும், விசாரிப்பதும் சைபர் கிரைம் பிரிவுகள் ஆகும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி தலைமையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு தான் விசாரிக்கிறது. இது சம்பந்தமான புகார்களை சட்டம் ஒழுங்கு போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கைக்கு பல காலம் காத்திருக்கும் நிலை உள்ளது. மண்டல வாரியாக சைபர் கிரைம் பிரிவு துவக்கப்படுவதாக இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல் இழந்து போன நிலையில் தான் உள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்கு என தனித்தனியாக தொடங்கப்படாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மண்டல வாரியாக சைபர் கிரைம் பிரிவு துவக்கப்பட வேண்டும் என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. மேலும் அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் இது போன்ற ஒரு புகார்களை வாங்க ஒரு தனிப்பிரிவை தொடங்கி, புகார் கொடுப்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை ரகசியமாக வைத்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். மோசடி உள்ளிட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவினர் விசாரிப்பதை போல், சைபர் குற்றங்கள் குறித்த அனைத்து புகார்களையும் இந்த சைபர் கிரைம் பிரிவு விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இளம்பெண்கள், மாணவிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக