சனி, 24 அக்டோபர், 2009

காஷ்மீரில் பயங்கர நில நடுக்கம் டெல்லியிலும் பூமி குலுங்கியது

காஷ்மீரில் நேற்று அதிகாலை 1.21 மணி அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கதவுகள், ஜன்னல்கள் குலுங்கின. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு நடுங்கும் குளிரில் திறந்த வெளிப்பகுதிக்கு ஓடி வந்தனர். சுமார் 25 வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவு பதிவாகி இருந்தது.
பரமுல்லா மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியையொட்டியுள்ள நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சுமார் 2 மணி நேரம் கழித்த பின்னரே வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்பு ஏதும் இல்லை என வானிலை இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் தலைநகர் டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் லேசான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தீயணைப்பு படையினரும், போலீசாரும் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக