வியாழன், 17 டிசம்பர், 2009
பலஸ்தீன் மக்கள் பிரிவினைத் தீர்மானத்தை 62 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்ததைப் போலவே இன்றும் எதிர்க்கிறார்கள்: ஹுஸாம் அஹ்மத்
காஸா- 1947 ஆம் ஆண்டு பிரிவினையை ஏற்குமாறு நிர்ப்பந்தித்த 181 ஆவது தீர்மானம் பெல்ஃபர் உடன்படிக்கையை சட்டபூர்வமாக்குவதை நோக்காகக் கொண்ட ஒரு சதித்திட்டமாகும் என்று ஹமாஸின் அகதிகள் விவகாரம் தொடர்பான திணைக்களத் தலைவர் ஹுஸாம் அஹ்மத் கருத்துரைத்தார்.
கடந்த 29.11.2009 பத்திரிகையாளர்களைச் சந்தித்த அஹ்மத், 62 ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சதித்திட்டம் இன்னுமே முடிவுறவில்லை. இதன் பின்னணியாக இருந்து செயல்படும் சர்வதேச சக்திகள் பலஸ்தீனர்கள் தமக்குள் பிளவுபட்டு இருப்பதையே இன்று பெரிதும் விரும்புகின்றன. அதன்மூலம் அவை தமது அரசியல் நலன்களை அடையவே விழைகின்றன. எனினும், இதனாலெல்லாம் பலஸ்தீன் மக்கள் தமது இலட்சியத்தை அடைவதில் சோர்ந்துவிடப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், பிரிவினைத் தீர்மானம் உண்மையில் (மே 9, 1916) ஸைகஸ்-பிக்கொட் உடன்படிக்கையின் தொடர்ச்சிதான் என்றும், அது அரபுலகத்தைத் துண்டாடியதோடு , பலஸ்தீனைப் பிரித்ததன் மூலம் ஸியோனிஸ சதித்திட்டத்தை நிலைநிறுத்துவதற்கேற்ற உறுதியான பின்புலத்தையும் பெற்றுக்கொடுத்தது என்றும் அறிவுறுத்தினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த 62 வருட காலமாக அமெரிக்காவின் தலைமையில் மேலாதிக்கம் செலுத்திவரும் காலனித்துவ சக்திகள் ‘இஸ்ரேல்’ எனும் இந்த ‘இராணுவ தள’த்தினை ஏதேனுமொரு வகையில் சட்டபூர்வமாக்குவதற்கு இடையறாது முயன்றுவருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் கடந்த 62 வருடங்களாகத் தன்பங்குக்கு பலஸ்தீன் மக்களுக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய அரபு மக்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிட்டபடி, ஒரு இனவாத, மனிதாபிமானமற்ற ஸ்தாபனமாக, தனது இருப்பை நிலைநிறுத்த இடையறாது பாடுபட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரண்டாம் உலகப் போரின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரிவினைத் தீர்மானம் ஒரு சர்வதேச ஸ்தாபனத்தினால் நிறைவேற்றப்பட்டிருப்பினும்கூட அது சட்டபூர்வமற்றதே. ஏனெனில், இச்சர்வதேச நிறுவனமானது காலனித்துவ சக்திகளின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை உலகின் பல பாகங்களிலும் பரவலாகப் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், பலஸ்தீன் மக்கள் பிரிவினைத் தீர்மானத்தை 62 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்ததைப் போலவே இன்றும் எதிர்க்கிறார்கள். அந்தத் தீர்மானம் ஒரு போலித்தீர்மானம் என்பதும், பலஸ்தீனர்களின் அங்கீகாரம் இல்லாத நிலையில் அதற்கு எத்தகைய பெறுமானமும் இல்லை என்பதும் ஐ.நா.வுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் என்றார்.
ஸியோ-அமெரிக்க கூட்டுச்சதித்திட்டத்தினை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அதனை பலஸ்தீனர்கள் அனைவரதும் ஒற்றுமையாலும், தத்தமது வீடுகளைவிட்டுப் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள பலஸ்தீன் அகதிகள் யாவரும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச்செல்லும் உறுதியான உணர்வினாலும் மட்டுமே சாதிக்கமுடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
நன்றி: PIC
freepalastine.com
0 comments:
கருத்துரையிடுக