திங்கள், 14 டிசம்பர், 2009

அனைவருக்கும் கல்வி?


அனைவருக்கும் கல்வி வழங்க, மத்திய அரசும் மாநில அரசுகளும் பல ஆயிரம் கோடிகளை செலவழித்து வருகின்றன. இருந்தாலும் இன்னமும் பல லட்சம் சிறுவர், சிறுமிகள் கம்பளம் தயாரிப்பிலும் பீடி சுற்றும் தொழிலிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர். குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் என்பதால், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்படும் நிறுவனங்கள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன. அதனால்தான், என்ன அதிரடி ரெய்டு நடத்தி, அபராதம் விதித்தாலும் இந்த பழக்கத்தை ஒழிக்க முடியவில்லை.
விவசாயம், கம்பளம் தயாரிப்பு, எம்பிராய்டரி, தையல் தொழில், பீடி, தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்பு போன்ற தொழில்களில்தான் அதிக எண்ணிக்கையில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். கிராமங்களில் நிலவும் வறுமைதான் முக்கிய காரணம். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களுக்கு மத்தியில் இரவும் பகலும் இவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
குடிசைத் தொழில் போல் நடக்கும் இதுபோன்ற பல சிறிய தொழிற்சாலைகளில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என குடும்பமே வேலை பார்க்கிறது. இவர்கள் வேலை பார்க்கும் தொழிற்சாலை குடும்பத் தலைவருக்கு சொந்தமானதாக இருக்கும் பட்சத்தில், அரசு அதிகாரிகள் அங்கு சோதனை கூட நடத்த முடியாது. என் பிள்ளை என் குடும்பத் தொழிலில் எனக்கு உதவியாக இருக்கிறான். இதில் என்ன தப்பு என வாதம் செய்வார்கள். சட்டமும் இதுவரை அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. இந்த சட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளது திட்டக் குழு. மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி அளிக்க முடியும் என்பதால் இந்த முடிவு.'பெரும்பாலான சிறிய தொழில்களில் குடும்பமே ஈடுபட்டிருக்கிறது. அப்படி இருந்தால்தான் சம்பாதிக்க முடிகிறது. இருந்தாலும் இந்த நிலைமை அப்படியே நீடித்தால், இந்தக் குழந்தைகளுக்கு எப்படி கல்வியறிவு கொடுக்க முடியும். சொந்த தொழிலாக இருந்தாலும் குழந்தைத் தொழிலாளர்களை அனுமதிக்க முடியாது' என திட்டவட்டமாகக் கூறியுள்ளது திட்டக் குழு. எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதையும் மீறி, வேலைக்கு அனுப்ப காரணம் வறுமை. அது இருக்கும் வரை எந்த சட்டமும் இங்கு செல்லாது.

0 comments:

கருத்துரையிடுக