வியாழன், 21 ஜனவரி, 2010

பெண்களுக்கு 2 பாஸ்போர்ட் !!!


வெளிநாட்டு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து அந்த நாட்டுக்குச் செல்லும் இந்திய பெண்கள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க அவர்களுக்கு இரண்டு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு என்றைக்குமே கிராக்கிதான். சாதாரண ஏழை மக்களுக்கு தங்கள் பெண்ணை சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது கனவு. அதே நேரத்தில் நடுத்தர குடும்பத்தினருக்கோ, அமெரிக்காவில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் மாப்பிள்ளை மேல் மோகம். 
ஆனால், வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு கழுத்தை நீட்டும் பெண்கள் அங்கு படும்பாட்டை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கணவனுடன் வெளிநாடு சென்றதும் அங்கு சித்திரவதை தொடங்கிவிடுகிறது. கணவனின் குடிப்பழக்கம், வேறொரு பெண்ணுடன் தொடர்பை சகிக்க முடியாமல் எதிர்த்தால் நிலைமை மோசமாகி விடுகிறது. இந்தியாவில் உள்ள பெற்றோருடன் தொடர்பு கொள்ளகூட மனைவியை அனுமதிப்பது இல்லை. பாஸ்போர்ட்டை கணவன் பறித்துக் கொள்வதால் அங்கிருந்து இந்தியா திரும்பக்கூட வழியில்லாமல் அடிமைகள் போல் பல பெண்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட புகார்கள் வந்துள்ளன. 
வெளிநாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய பெண்கள் தவிப்பதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளது. இதன்படி, வெளிநாட்டு வாழ் இந்தியரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்படும். இதில், ஒன்று அந்த பெண்ணின் தந்தையிடம் தரப்படும். மற்றொன் றை பயன்படுத்தி அந்த பெண் கணவருடன் வெளிநாடு செல்லலாம். வெளிநாட்டில் அந்த பெண் கணவனால் சித்திரவதை செய்யப்பட்டால், இந்தியாவில் இருந்து செல்லும் அவளது தந்தை தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பெண்ணை அழைத்து வரலாம். 
இரண்டு பாஸ்போர்ட் வழங்குவது குறித்த பரிந்துரையை வெளியுறவு அமைச்சகத்திடம் மத்திய மகளிர், குழந்தை நலத் துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக