செவ்வாய், 26 ஜனவரி, 2010

சவூதி புது விசா: இந்தியர்களுக்கு இனி போலிஸ் சர்ட்டிஃபிகேட் தேவைப்படும்.

சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் இனி, காவல்துறையினரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றாக வேண்டும்.
இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சவூதி தூதரக காரியாலயங்கள் இந்தத் தடையில்லா சான்றிதழ் இருந்தாலே வேலைவாய்ப்பு விசாக்களை (நுழைமதிகளை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாம். இது பற்றிய சவூதி தூதரக அறிவிப்பொன்று இந்தியாவின் எல்லா மண்டல பாஸ்போர்ட் (கடவுத்துறை) அதிகாரிகளுக்கும், பதிவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.
இந்த விதி ஏற்படுத்தப்படுவதன் மூலம் குற்றப்பின்னணி உடைய இந்தியர்கள் சவூதியில் நுழைவது தடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் மூத்த அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "காவல்துறையின் தடையில்லாச் சான்றினை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமே உரிய காவல்நிலையத்தின் பரிந்துரைக்குப்பின்னர் வழங்கும்" என்று தெளிவாக்கினார். இருநாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புதலுக்குப் பிறகே, சவூதி அரசு இம்முடிவை எட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு மும்பையிலுள்ள சவூதி துணை தூதரகத்தில் சுமார் 4000 நுழைமதிகளும், டெல்லியில் 800 நுழைமதிகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனவாம்.
சுமார் 1.8 மில்லியன் இந்தியர்கள் சவூதியில் உள்ளதாகவும், அதில் 1300 பேர்வரை சிறையில் வாடுவதாகவும், வெளிநாட்டார் சிறைகளில் வாடும் இந்தியர் தொகையில் இதுவே உயர் எண்ணிக்கை என்றும் கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக