கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் நேற்று (வியாழன்) இரவு 11 மணியளவில் நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள டவுன் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில்வே தண்டவாளத்துக்கு குறுக்கே சுமார் மூன்றரை மீட்டர் உயர தண்டவாள கம்பி வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் ரயில் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும்
சுதாரித்துக் கொண்டு ரயிலின் வேகத்தை கொஞ்சம், கொஞ்சமாக கட்டுப்படுத்தினார். இருப்பினும் வந்த வேகத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த கம்பி மீது ரயில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டி கள் தடம் புரளவில்லை.
ரயில் வேகத்திலேயே கம்பியை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் இழுத்து சென்றது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ரயில்வே மேலாளர் ஜெயசிங் அளித்த புகாரின் பேரில் ரயில்வே டி.எஸ்.பி. முகமது இக்பால், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசுலோக்சனா மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர். நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், வடசேரி இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீ சாரும் அங்கு விரைந்தனர். சம்பவ நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதி ஆகும். வழக்கமாக தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்துவார்கள். எனவே குடிபோதையில் யாராவது இது போன்ற செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டிரைவரின் சாமர்த்தியத்தால் தான் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டு இருக்கிறது. கம்பி மீது ரயில் வேகமாக மோதி ஏறி இருந்தால் ரயில் கவிழ்ந்து மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலையில் ரயில்வே டி.எஸ்.பி. முகமது இக்பால் மற்றும் போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். ரயில் திடீரென நிறுத்தப்பட்ட பிறகே தண்டவாளத்தில் கம்பி இருந்த தகவல் பயணிகளுக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் காரணமாக சுமார் 20 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக