வியாழன், 25 பிப்ரவரி, 2010

மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு :காம்ரேடுகளின் திடீர் பாசத்தின் பின்னணி !

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கப்படும் என்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரி வித்திருக்கிறார்.
இது சமய அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களான முஸ்லிம்களின் உரிமைகளை பேணுவதில் பெருமிதம் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வின் தீர்ப்பு சமூக நீதியாளர்களின் மனதை வருத்தமுறச் செய்த நிலையில் மேற்குவங்க அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நில உடமையாளர்களை எதிர்த்தும், விவசாயக் கூலிகளுக்காகவும் போர்க் குரல் எழுப்பிய மார்க்சியம் மேற்கு வங்கத்தில் 30 சதவீதம் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்டு, அழுத்தப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் அவலநிலை குறித்து சிறிதளவும் கவலைப்படவில்லை.சச்சார் கமிட்டியின் ஆய்வறிக்கையினை செயல்படுத்துவதில் காட்டிய மெத்தனபோக்கால் மேற்கு வங்க அரசு, முஸ்லிம்களின் மேம்பாடு தொடர்பாக பாராமுகமாக இருந்ததை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.மேற்கு வங்க முஸ்லிம்களின் அவல நிலை மட்டுமல்ல காம்ரேடுகளின் வாய்ச்சவடாலும் அம்பலத்துக்கு வந்தன.
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்த மார்க்கிஸ்டுகளின் நிரந்தரவாக்கு வங்கிகளாக முஸ்லிம்கள் திகழ்ந்தனர்.எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும் அது மலிவாகவும், எளிதாகவும் கிடைத்தால் அதன் மீது துளியும் மதிப்பு வைக்காத பொதுப்புத்திக்கு மார்க்சிஸ்ட்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
தங்களை ஏற்றிவிட்ட ஏணியை மறந்து மேற்கு வங்க தொடர்வெற்றி சாதனை என்பது பொதுவுடமையின் வெற்றி மட்டுமே என்பதாகச் பிரகடனம் செய்தனர். முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. (மதரஸா விவகாரங்களுக்காக தனித்துறை அமைச்சர் மேற்கு வங்கத்தில் இருக்கிறார் என்பதைத் தவிர) வேறெந்த முஸ்லிம்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
போதாக்குறைக்கு நந்தி கிராம் பிரச்சினையில் முஸ்லிம்கள் குறிவைத்து நசுக்கப்பட்டனர். அதன் விளைவினை நந்தி கிராம் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வினை பரிசாக பெற்றுக் கொண்டனர்.(திரிணமுல் காங்கிரசின் பெரோசா பீபி என்ற முஸ்லிம் பெண் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்தார்.)மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் முஸ்லிம்களின் மனதில் மெள்ளமெள்ள இடம் பிடித்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கூட்டணி கம்யூனிஸ்ட் கோட்டைக்கு வேட்டு வைத்தது. திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி எழுச்சிக்கு மம்தா மட்டுமல்ல மார்க்சிஸ்டுகளின் செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிரந்தர வாக்கு வங்கியை மீண்டும் மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் அரசு முஸ்லிம்களின் இடஓதுக்கீட்டினை அறிவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு அறிவிப்பினைத் தொடர்ந்து இடஒதுக்கீடு இல்லாத பிற மாநிலங்களிலும் இடஒதுக்கீட்டு கோரிக்கை குரல்கள் வலுத்து வருகின்றன. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சமுதாய இயக்கங்கள் தங்கள் போராட்டத்தை
தீவிரப்படுத்தியுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக