வியாழன், 25 பிப்ரவரி, 2010

வாஸ்து, ஜோதிடத்துக்கு தடை கோரி வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு!

வாஸ்து, ஜோதிடத்துக்கு தடை விதிக்கக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொது நல வழக்கு
'ஜன்கித் மஞ்ச்' என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் பகவான்ஜி ரயானி. இவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளார். பிரசித்தி பெற்ற ஜோதிடர் பேஜன் தாருவாலா, வாஸ்து ஆலோசகர்கள் டாக்டர் ரவிராஜ், ராஜேஷ் ஷா, சந்திரசேகர் குருஜி, நவரத்தின ஜோதிடர் பவிக் சங்கவி, பிரம்மார்ஷி ஸ்ரீகுமார் சுவாமிஜி ஆகியோரை எதிர் வழக்குதாரர்களாக குறிப்பிட்டுள்ளார். வழக்கில் அவர் விஞ்ஞானம் அல்லாத ஜோதிடத்தையும், வாஸ்துவையும் தடை செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.
இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நேற்று நீதிபதிகள் எப்.ஐ.ரெபெல்லோ, ஜே.எச்.பாட்டியா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரரான பகவான்ஜி ரயானி வாதிடுகையில், அரசியல் சாசனத்தின் கொள்கைப்படி, விஞ்ஞானப்பூர்வமானதை மட்டுமே அரசு ஊக்குவிக்க வேண்டும். ஜோதிடம் சொல்வதை தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு விஞ்ஞானம் அல்ல என்று கூறினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் அத்வைத் சேதனா, ஜோதிடத்துக்கு மந்திர நிவாரண சட்டம் போதுமான பாதுகாப்பு அளித்துள்ளது. இவையெல்லாம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று கூறினார்.
உடனே ரயானி, நீண்ட நெடுங்காலமாக ஜோதிடம் கூறப்படுகிறது என்பதற்காக அதை நியாயப்படுத்த முடியாது என்றார். நவரத்தின ஜோதிடர் பவிக் சங்கவியின் வக்கீல் வாதிடுகையில், ஜோதிடம் என்பது விஞ்ஞானம், பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கலாம் என்று ஏற்கனவே ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என்று கூறினார். நீதிபதிகள் ரெபெல்லோ, பாட்டியா ஆகியோர், இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் கேட்க விரும்புவது, இதுவரை மந்திர நிவாரணச்சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் வந்திருக்கின்றன என்பதுதான் என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:

கருத்துரையிடுக