வெள்ளி, 16 ஏப்ரல், 2010

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகம் மே 17 முதல் துவக்கம்

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு) மாணவர்களைச் சேர்ப்பதற்கான அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவரத்தை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி ஆகியோர் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டனர். எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் மே 17-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். சென்னை (3 கல்லூரிகள்), செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, சேலம், கோவை, தருமபுரி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். 
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க 16,000 விண்ணப்பங்களை அச்சடிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்க மே 27-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500: எம்.பி.பி.எஸ். விண்ணப்பக் கட்டணம் ரூ.500-ல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மேலே குறிப்பிட்ட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,483 மாநில ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீட்டு 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஜூன் 7-ம் தேதி ரேண்டம் எண்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு, விண்ணப்பத் தகுதி அடிப்படையில் ஜூன் 7-ம் தேதி ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) ஒதுக்கப்படும்.
அதைத் தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 21-ல் கவுன்சலிங்: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21-ல் தொடங்குகிறது. ஜூலை 7-ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் நிறைவடையும். விழுப்புரம், திருவாரூர்: விழுப்புரம், திருவாரூரில் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. எனினும் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. 
எனவே முதல் கட்ட கவுன்சலிங்கில் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்காது. ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. பி.இ. கவுன்சலிங் ஜூன் 28-ல் தொடங்கி ஜூலை 25-ல் நிறைவடைகிறது. இந்த ஆண்டும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கவுன்சலிங்குக்கு முன்பாக எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.  
* விண்ணப்ப விநியோகம் --- மே ௧௭
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க கடைசி நாள் --- மே 27 
 * ரேண்டம் எண் ஒதுக்கீடு -------- ஜூன் 7 
 * ரேங்க் பட்டியல் வெளியீடு ------ ஜூன் 11 
 * முதல் கட்ட கவுன்சலிங் -------- ஜூன் 21 
 * முதல் கட்ட கவுன்சலிங் முடிவு ---- ஜூலை 7 
 நன்றி: குறிஞ்சிதமிழ்

0 comments:

கருத்துரையிடுக