வெள்ளி, 16 ஏப்ரல், 2010

27-ந் தேதி `பாரத் பந்த்' விலைவாசி உயர்வை எதிர்த்து நடத்தபடுகிறது

விலைவாசி உயர்வை எதிர்த்து 27-ந் தேதி `பாரத் பந்த்' நடத்துவது என்றும், பாராளுமன்றத்தில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வருவது என்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து முடிவு செய்துள்ளன. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 15-ந் தேதி மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கூட்டாக வியூகம் வகுப்பதற்காக, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளின் கூட்டணிகளில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ் கரத், சீத்தாராம் யெச்சூரி, பாசுதேவ் ஆச்சார்யா, இந்திய கம்முனிஸ்டு சார்பில் பி.பரதன்,
டி.ராஜா, குருதாஸ் தாஸ்குப்தா, பார்வர்டு பிளாக் சார்பில் பிஸ்வாஸ், புரட்சி சோஷலிஸ்டு கட்சி சார்பில் சந்திரசூடன், அபானிராய், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் லாலுபிரசாத், பிரேம்சந்த் குப்தா, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு, எர்ரன் நாயுடு, அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவே கவுடா, இந்திய தேசிய லோக்தளம் தலைவர் சவுதாலா, ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜீத்சிங், ஜனதாதளம் சார்பில் அர்ஜுன் சரண் சேத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் பங்கேற்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலியான 76 போலீசாருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, விலைவாசி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம், 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு, இந்திய கம்ïனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உர விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதித்தோம். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட இதர பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வரலாறு காணாத விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். விலைவாசி உயர்வுக்கு எதிராக, வரும் 27-ந் தேதி நாடுதழுவிய வகையில், `பாரத் பந்த்' நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிதி மசோதா மீது 13 கட்சிகளும் இணைந்து, பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, வெட்டுத் தீர்மானம் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 
இதுதொடர்பாக, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வெட்டுத் தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும்தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர்க்கவே நாங்கள் பாடுபடுகிறோம். பெண்கள் மசோதா குறித்து விவாதித்தோம். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பெண்கள் மசோதா குறித்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அக்கூட்டம் நடந்த பிறகு, நாங்கள் கூடிப்பேசி எங்கள் நிலையை தீர்மானிப்போம். இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார். நன்றி: குறிஞ்சிதமிழ்

0 comments:

கருத்துரையிடுக