வெள்ளி, 16 ஏப்ரல், 2010
புளூடோனியம் அணு உலையை மூடியது இரஷ்யா
அணு குண்டு வெடிபொருளான புளூடோனியத்தை தயாரிக்கப் பயன்படுத்திவந்த கடைசி அணு உலையை இன்றுடன் மூடுவதாக இரஷ்யா அறிவித்துள்ளது.
வாஷிங்டனில் நடந்த அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றி இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ், சைபீரியாவில் இயங்கிவரும் தங்களின் கடைசி புளூடோனியம் அணு உலையை மூடுவதாக அறிவித்தார். அதன்படி, இரஷ்ய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சைபீரியாவில் உள்ள கிரஸ்நோயார்ஸ்க் அணு உலையில் கடந்த 46 ஆண்டுகளாக அணு குண்டுக்கான புளூடோனியம் வெடிபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது.
புளூடோனியம் எனும் அணு வெடிபொருள் இயற்கையில் கிடைப்பதில்லை, அது அணு உலைகளில் யுரேனியத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் உப அணுப் பொருளாகும். அதனை நன்கு செரிவூட்டப்பட்டு அணு குண்டு வெடிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த புளூடோனிய தயாரிப்பு அணு உலையில் செயல்பாடு கடந்த ஆண்டு ஜூன் முதல் புளூடோனியத் தயாரிப்பை செய்யவில்லை. ஆனால் அதனோடு கூடிய ஏடிஇ-2 என்று அணு உலை மின்சார தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கு நடந்த பனிப் போர் காலத்தில் இரு நாடுகளும் பெருமளவிற்கு அணு குண்டுகளை தயாரித்துக் குவித்தன. அப்போது இரஷ்யாவில் மட்டும் 13 புளூடோனியம் தயாரிப்பு அணு உலைகள் செயல்பட்டுவந்தது. அமெரிக்காவில் 14 அணு உலைகள் இதே காரணத்திற்காக இயங்கி வந்தன.
அமெரிக்கா, இரஷ்யா இடையே அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கின. ஏற்கனவே தயாரித்து குவித்திருந்த அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்தன. அதிலிருந்த அணு வெடிப் பொருளை எடுத்து அணு மின் உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தி வந்தன.
இதனால் இரு நாடுகளிலும் இயங்கிவந்த புளூடோனியம் உலைகள் ஒவ்வொன்றாக முடப்பட்டு வந்தது. அமெரிக்காவில் இயங்கிவந்த 14 புளூடோனியம் உலைகளும் மூடப்பட்டுவிட்டது.
இப்போது கடைசி புளூடோனியம் அணு உலையை இரஷ்யாவும் மூடிவிட்டது.
ஆயினும் இவ்விரு நாடுகளிடமும் இன்னமும் 5,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 30 விழுக்காடு குறைக்க சமீபத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, தங்களுடைய இருப்பில் இருக்கும் 34 டன் புளூடோனியத்தை அணு உலைகளுக்கான எரிபொருளாக மாற்றி, அணு மின் உலைகளில் பயன்படுத்த மற்ற நாடுகளுக்கு விற்கவும் முடிவு செய்துள்ளன.
0 comments:
கருத்துரையிடுக