வெள்ளி, 21 மே, 2010
குமரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜூன் 1ம் தேதி துவக்கம்.
மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள்
கணக்கெடுப்பும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பும் வரும் ஜூன் 1ம் தேதி
முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி
வந்து விபரங்களை சேகரிக்க உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் தரும் விபரங்களை படிவங்களில்
பூர்த்தி செய்துகொள்வர்.
வீட்டு பட்டியல் கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு வீட்டிலும்
குடும்ப தலைவர் பெயர், குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின்
எண்ணிக்கை, வீட்டின் கட்டுமான பொருள், குடிநீர் வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி,
குடும்பத்தின் வசம் உள்ள பொருட்கள் (சைக்கிள், பைக், மொபட், கார், ஜீப், வேன்,
டிரான்சிஸ்டர், ரேடியோ, தொலைபேசி, செல்போன், கம்ப்யூட்டர்) உள்ளிட்ட முக்கிய
விபரங்களை சேகரிப்பர்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்காக குடும்ப தலைவரின் பெயர்,
குடும்ப அங்கத்தினர்களின் பெயர், ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி, திருமண நிலை, தொழில்
நடவடிக்கை, தந்தை, தாயார், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய முகவரி, நிரந்தர
முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரிப்பர்.
குடும்ப அங்கத்தினர்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை
ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருக்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது தேடாமல் இவ்விபரத்தை உடனே
கொடுப்பதற்கு வசதி செய்திட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 1800 110 111 என்ற கட்டணமில்லா
தொலைபேசியிலும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக