புதன், 19 மே, 2010

மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி.


வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக, இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்ட சேனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, மேலும் ஆதாரங்களை அளிக்கும் வகையில், அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரது பேட்டியையும், மற்றும் போர் முனையில் களத்திலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூல பேட்டியையும் சேனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனாதன் மில்லருக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியிருப்பதாவது:  "எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். 
விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.  இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் தங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் என செய்தி வெளியிட்டுள்ள சேனல் - 4 தொலைக்காட்சி,அந்த பேட்டியைப் பதிவு செய்த வீடியோ காட்சியையும் ஒளிபரப்பி உள்ளது.  வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட அந்த இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில், 
"முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்ரவதை செய்தோம்.பின்னர் கொலை செய்தோம்.போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன.அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார். 
சேனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் -புலிகள் தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார்" என்று கூறியுள்ளார்.  இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனுக்கான இலங்கை தூதரிடம் சேனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது "இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர்.
அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.  சேனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது எந்த பதிலும் கூறமுடியாது.இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள்.அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும். 
இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார்" என்று பதிலளித்தார்.  இதனிடையே இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கையை முன்னுதராணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக