வியாழன், 10 ஜூன், 2010

எஸ்எஸ்எல்சி தேர்ச்சியை பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாணவிகள் தங்கள் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.​ இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெ.​ ரவீந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:​
பள்ளியிறுதி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் 15.6.2010-ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதையடுத்து அச் சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு ஏராளமான மாணவ,​​ மாணவிகள் நாகர்கோவிலில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திரள்வர்.​ ​​ இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.​ இதை தவிர்க்கும் பொருட்டும்,​​ மாணவ,​​ மாணவிகளின் வசதிக்காகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
​பள்ளி மாணவ,​​ மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றதும்,​​ அப் பள்ளிகளிலேயே பள்ளி நிர்வாகத்தால் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யப்படுவார்கள்.​ எனவே மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு செல்லும்போது குடும்ப அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்,​​ மதிப்பெண் சான்றிதழின் ஜெராக்ஸ் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றை சான்றொப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு படிவத்துடன் இணைத்து பள்ளியிலேயே அளிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.​ இதையடுத்து உரிய பதிவு அட்டைகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.​ அந்த அட்டைகள் மாணவ,​​ மாணவிகளுக்கு அவர்களது பள்ளிகளிலேயே அளிக்கப்படும்.​ எனவே 2010-ம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்த பள்ளிகளிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.​ மாணவ,​​ மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை என்றார்.
இந்நிலையில் அலுவலக பதிவுக்கான படிவங்களை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் பணியை நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் பொன்னையா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

0 comments:

கருத்துரையிடுக