வெள்ளி, 19 நவம்பர், 2010

இந்தியாவில் ஓடும் ரெயில்களுக்கு 5 இலக்க எண்கள்.



இந்தியாவில் ஓடும் ரெயில்களுக்கு அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 5 இலக்க எண்கள் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே இணை மந்திரி முனியப்பா, பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், மின்சார ரெயில்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கு 4 இலக்கங்களில் தற்போது எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மொத்த ரெயில்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை எட்டி விட்டதால் 5 இலக்கங்களில் எண்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி முனியப்பா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் தற்போது தினமும் சராசரியாக 11 ஆயிரம் பயணிகள் ரெயில்கள் ஓடுகின்றன. இந்த ரெயில்களுக்கு தற்போது 4 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 9999 என்ற எண் வரை மட்டுமே ரெயில்களுக்கு எண்கள் ஒதுக்க முடியும். இந்திய ரெயில்வேயின் பல்வேறு கம்ïட்டர் மென்பொருளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ரெயில்களுக்கு புதிதாக ஒரு தனித்தன்மையான எண் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, 4 இலக்கத்தில் இருந்து 5 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளன. அதன்படி, எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்போதைய எண்ணுக்கு முன்பாக `1' என்ற எண் சேர்க்கப்படும். அதுபோல, சிறப்பு ரெயில்களுக்கு `0' என்ற எண்ணும், பயணிகள் (பாசஞ்சர்) ரெயில்களுக்கு `5' என்ற எண்ணும், மெயின் லைன் ரெயில்களுக்கு `6' என்ற எண்ணும், டீசல் என்ஜின் ரெயில்களுக்கு `7' என்ற எண்ணும் தற்போதையை நான்கு இலக்க எண்ணுக்கு முன்னால் சேர்க்கப்படும்.
கொல்கத்தா நகரில் இயக்கப்படும் புறநகர் ரெயில்களின் எண்ணுக்கு முன்பாக `3' என்ற எண்ணும், மும்பை நகரில் இயங்கும் புறநகர் ரெயில்களின் எண்ணுக்கு முன்னால், `9' என்ற எண்ணும், சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர நகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரெயில்களின் எண்ணுக்கு முன்னால், `4' என்ற எண்ணும் சேர்க்கப்படுகிறது.
இந்த ஐந்து இலக்க எண் மாற்றமானது, டிசம்பர் மாதம் (அடுத்த மாதம்) 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தேர்வு கட்டணம் ரத்து

சச்சார் கமிட்டி ஆலோசனைகளை இந்திய ரெயில்வே கருத்தில் கொண்டுள்ளது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள், பெண்கள் ஆகியோரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுத்துள்ளது.
சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதற்காக ரெயில்வே தேர்வு வாரியத்தில் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரெயில்வே தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகள் தவிர பிராந்திய மொழிகளிலும் வினா-விடை தாள்களை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குரூப்-சி மற்றும் டி தேர்வுகளை எழுதும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக