வியாழன், 25 நவம்பர், 2010

திருவிதாங்கோடு அமராவதி குளம் பாலத்தில் உடைப்பு; போக்குவரத்து பாதிப்பு


குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தக்கலை, மார்த்தாண்டம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தக்கலை அருகே திருவிதாங்கோட்டுக்கும் கோழிப்போர்விளைக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள அமராவதி குளம் இந்த மழையால் நிரம்பியது. இந்த குளக்கரையில் உள்ள சாலை பாலத்தின் கீழ் உள்ள மடை வழியாக பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த குளம் நிரம்பி விட்டதால் இந்த பால மடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அதை நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர்.
இந்தநிலையில் தற்போது பெய்து வரும் பலத்த மழையால் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் குளத்து தண்ணீர் செல்லும் பால மடை பகுதியில் மழை வெள்ளத்தால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாலத்தின் பக்கச்சுவர்கள் இடிந்தன. மேலும் பாலத்தின் நடுவில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளியாடி, கருங்கல், உதயமார்த்தாண்டம், புதுக்கடை பஸ்கள் அழகியமண்டபம், கோழிப்போர்விளை வழியாக சுற்றிச் செல்கின்றன. 

0 comments:

கருத்துரையிடுக