சனி, 27 நவம்பர், 2010
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: நிரம்பும் தறுவாயில் அணைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகள் நிரம்பும் தறுவாயில் உள்ளன. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை நீர்மட்டம் 41.90 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 48 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அணைப் பகுதியில் 12.4 மி.மீ. மழை பெய்திருந்தது. 77 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி நீர்மட்டம் 71.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றாறு 1 நீர்மட்டம் 16.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 236 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றாறு 2 நீர்மட்டம் 16.43 அடியை எட்டியிருந்தது. அணைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பும் தறுவாயில் உள்ளன. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் முதற்கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் உபரிநீர் ஆறுகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பேச்சிப்பாறை- 12.4, பெருஞ்சாணி- 21.4, சிற்றாறு 1- 3, சுருளோடு- 12.8, பூதப்பாண்டி- 6.1, கன்னிமார்- 9.2, நாகர்கோவில்- 9.5, மயிலாடி- 7.6, கொட்டாரம்- 15.6, புத்தன்அணை- 22, ஆனைக்கிடங்கு- 8.8, குருந்தன்கோடு- 6.8, அடையாமடை- 16, கோழிப்போர்விளை- 17, ஆரல்வாய்மொழி- 10.2, முள்ளங்கினாவிளை- 39.4, திருவட்டார்- 4, நிலப்பாறை- 4, குளச்சல்- 12.4, இரணியல்- 2.4.
0 comments:
கருத்துரையிடுக