திங்கள், 6 டிசம்பர், 2010

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது. அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.
இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.
அல்லாஹ் தனது நல்லடியார்களைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்:- அல்லாஹ்வின்மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டோருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாம் உணவளிப்பது அல்லாஹ்வின் முகத்தை நாடித்தான். உங்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்துவதையோ நாங்கள் விரும்பவில்லை. எனக்(கூறுவர்) (அத்தஹ்ர் 76:8-9) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:- அவர்கள் (தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து பொருட்படுத்தாது விட்டுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மிகக் கிருபையுடையவனுமாவான். (அந்நூர் 24:22) 
"எத்தகைய இஸ்லாம் சிறந்தது?" என பெருமானாரிடம் கேட்கப்பட்டது; "பசித்தவருக்கு உணவளித்து, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் சொல்லும் இஸ்லாமே சிறப்புடையது" என்று செம்மல் நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி)
மனிதர்களிடம் யார் கிருபை காட்டவில்லையோ அவர்களிடம் அல்லாஹ் கிருபை காட்டமாட்டான். (புகாரி, முஸ்லிம்)
நீங்கள் எந்த நோயாளியிடம் சென்ற போதினும் அவருக்கு நீண்ட ஆயுளை நல்குமாறு இறைஞ்சவும். ஏனெனில் இதன் காரணமாக அவருக்கு மன ஆறுதல் ஏற்படுகிறது. (திர்மிதீ)
நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் (உங்களுக்குச்) சோதனையாடிருக்கும் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் - அவனிடத்தில்தான் மகத்தான (நற்) கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (குர்ஆன் 8:28)
உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னமே உங்களுடைய ரப்பின்பால் நீங்கள் திரும்பிவிடுங்கள்; அவனுக்கு நீங்கள் முற்றிலும் பணிந்து விடுங்கள்; (வேதனை வந்தால்) பிறகு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன் 39:54)

0 comments:

கருத்துரையிடுக