திங்கள், 6 டிசம்பர், 2010
ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு) - K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.
ஆஷுரா நோன்பின் சிறப்புகள்:
1. ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமளான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாள் நோன்பின் சிறப்பை தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் தேடியதை நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
2. ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
3. ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் ஹதீதுகள்:
1. நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். உங்களைவிட மூஸா(அலை) அவர்கள் விஷயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தேழார்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.
2. நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன்பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவிற்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.
3. அஸ்லம் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் அறிவிப்பை) மக்ககளுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள், யாராவது உணவு சாப்பிட்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும் காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)
4. ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளாக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை:
1. ரமளான் (நோன்பிற்கு) முன் ஆஷுரா நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
2. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள் விரும்பியவர்கள் அதை விட்டார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)
3. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளானுடைய நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் அதை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷுரா தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும், விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் என்றார்கள். (முஸ்லிம்)
4. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் குறைஷிகள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அன்றைய தினம் கஃபாவிற்கு திரையிடப்படும் தினமாக இருந்தது. (புகாரி)
5. இது ஆஷுரா தினமாகும், உங்களுக்கு அல்லாஹ் அந்த நோன்பை கடமையாக்கவில்லை, நான் நோன்பு நோற்றிருக்கின்றேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விடட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா(ரலி) அவர்கள் கூறிய செய்தியை ஹுமைத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
6. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விஷயம், ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது சுன்னா என்பது எடுபடவில்லை, நபி(ஸல்) அவர்கள் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர அது சுன்னத்து என்பதையல்ல. அது இன்னமும் தரிபட்டதாக இருக்கின்றது என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
வரிசை எண் 3-ஆம் ஹதீது மேற்கூறப்பட்ட கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீது பலவீனமானதாகும். இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை தஹபி இமாம் அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.
ஆகவே ஆதாரப்பூர்வமான ”எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.
முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும். அதையே முன்சென்ற நபிமொழிகளில் பார்த்தோம். இதை தவிர்த்து அன்றைய தினத்தில் விஷேச வணக்கங்கள் புரிவது மற்றும் உணவுப்பண்டங்கள் செய்து ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது பள்ளிவாசல்களுக்கு அனுப்புவது போன்ற காரியங்கள் அனைத்தும் பித்அத்தாகும். அதே போன்று ஷீஆக்கள் அன்றைய தினத்தை துக்க தினமாக கொண்டாடுவதும் பித்அத்தாகும். இவைகள் அனைத்தையும் தவிர்த்து நபிவழி பேணுவோமாக!
0 comments:
கருத்துரையிடுக