திங்கள், 27 டிசம்பர், 2010
நீரா ராடியாவுக்கு பேருதவி புரிந்தார் பாஜகவின் அனந்த்குமார்: முன்னாள் பார்ட்னர் தீரஜ் சிங்.
நீரா ராடியாவுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் என்று கூறியுள்ளார் ராடியாவின் முன்னாள் பங்குதாரரான ராவ் தீரஜ் சிங். நீரா ராடியாவுடன் முன்பு இணைந்து செயல்பட்டவர் சிங். தற்போது நீரா ராடியா குறித்த பல தகவல்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமாக பாஜகவுடன் ராடியாவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, பாஜக ராடியாவுக்காக என்னென்ன செய்தது என்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ராடியாவின் அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பவர் சிங். அவருடன் தொழில் பார்ட்னராக இருந்தார். பின்னர் ராடியாவின் மகன் கரணை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவர். 1995ம் ஆண்டு முதல் 2002 வரை ராடியாவுடன் இணைந்திருந்தார் சிங். அப்போது ராடியா நடத்தி வந்த கிரவுன் மார்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இவரும் ஒரு பார்ட்னராக இருந்தார்.
ராடியா குறித்து அவர் இந்தியா டுடே இதழுக்கு அளித்துள்ள பேட்டி...
நான் முதல் முறையாக ராடியாவை சந்தித்தது 1994ம் ஆண்டுதான். அப்போது நான் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் போக்குவரத்து கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தேன். ராடியா, சஹாராவின் ஆலோசகராக இருந்தார். பின்னர் தனது சொந்த நிறுவனமான கிரவுன் மார்ட் நிறுவனத்தில் பணியாற்ற என்னை அழைத்தார். பின்னர் இருவரும் 1995ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம். அங்கு சில நிறுவனங்களையும், ஹோட்டல் தொழிலையும் மேற்கொண்டார் ராடியா.
கேஎல்எம் யுகே நிறுவனத்துக்கு உதவிய ராடியா:
பின்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார் ராடியா. அங்கு மோடிலப்ட் நிறுவனத்திற்கு இரண்டு விமானங்களை விற்பது தொடர்பாக எங்களை அணுகியது கேஎல்எம் யுகே. நிறுவனம். ஆனால் சில எண்ணை நிறுவனங்களுக்குத் தர வேண்டிய பண பாக்கிக்காக அந்த விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கிலிருந்து விடுபட எங்களது உதவியை நாடியது கேஎல்எம். இந்தியாவில் என்ன செய்தால் காரியத்தை சாதிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் வக்கீல்கள் மூலமாக கடுமையாக முயன்றோம். கடைசியில், விமானங்களை விடுவிக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. விமானங்களை விடுவிப்பதற்காக எங்களது நிறுவனம் ரூ. 2.5 கோடியை செலவிட்டது.
'பாஜக ஆட்சியில் ராடியா செல்வாக்கு உயர்ந்தது':
மத்தியில் 1998ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ராடியாவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. அதிலும், அனந்த்குமார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரான பின்னர்தான் ராடியா வேகமாக வளர்ந்தார். கேஎல்எம் விவகாரத்தை வெற்றிகரமாக டீல் செய்ததால் ராடியாவை பல விமான நிறுவனங்கள் அணுகின. சஹாராவுக்காக சில ஹெலிகாப்டர்களை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம். ஏர்பஸ் கன்சார்டியம் ராடியாவுக்கு முழு ஆதரவாக இருந்தது. கர்நாடகா, மகாராஷ்டிர அரசுகளுக்கு யூரோகாப்டர்களை பெற்றுக் கொடுத்தார் ராடியா. அப்போது மகாராஷ்டிராவில் பாஜக அரசு இருந்தது.
இழுத்துப் போட்டு உதவிய அனந்த்குமார்:
மறுபக்கம் அனந்த்குமாருடன் தனது உறவை நெருக்கமாக்கிக் கொண்டார் ராடியா. எங்களுக்காக பல விஷயங்களை அனந்த்குமார் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். அரசின் பல ரகசிய தகவல்களை பெற்று அவற்றை பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவார் ராடியா. சில சமயங்களில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களைக் கூட அவர் பெற முயன்றதுண்டு.
ஒருமுறை நான், ராடியா, அவரது சகோதரி கருணா ஆகியோர் ஜூரிச் சென்றோம். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவதற்காக அங்கு சென்றோம். இதற்கு பாஸ்போர்ட் தகவலே ஆதாரம். எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது என்ற தகவலும் என்னிடம் உள்ளது.
சுவிஸ் வங்கியில் பணம்:
1998 முதல் 2001 வரை பல்வேறு டீல்கள் மூலம் ராடியா சம்பாதித்த பணத்தையெல்லாம் ஜூரிச் வங்கியில்தான் போட்டு வைத்துள்ளார். அதேபோல சேனல் தீவிலும் ஒரு வங்கிக் கணக்கை அவர் வைத்துள்ளார். எவ்வளவு பணம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கணிசமான பணம் உள்ளது என்பது மட்டும் உறுதி.
ஜெட் ஏர்வேஸை முடக்கிய ராடியா:
ஒருமுறை ஜெட் ஏர்வேஸ் விமானம் வாங்க அனுமதி கோரி சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதை தனது செல்வாக்கால் முடக்கி வைத்தார் ராடியா. இதனால் ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயல், ராடியா மீது கடும் கோபமடைந்தார். மேலும், பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏடிஆரை அணுகி, நரேஷ் கோயல் விமானத்தை முடக்கிப் போட அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நீங்கள் விற்க வேண்டாம். மேலும், கோயல் பணம் தர மாட்டார். நீங்கள் எங்களிடம் விற்றால் உடனடியாக பணம் கிடைக்கும் என்று கூறினார் ராடியா. இதை ஏடிஆர் நிறுவனமும் ஏற்றது. இந்த டீல் மூலம் ரூ. 1.86 கோடி பணம் எங்களுக்குக் கிடைத்தது. அனந்த்குமாருடன் மட்டும் நிற்கவில்லை ராடியாவின் பாஜக தொடர்புகள். அவரையும் தாண்டி வியாபித்திருந்தது. இதன் காரணமாக 2002ம் ஆண்டு வசந்த் கன்ச் பகுதியில் நீராவின் டிரஸ்டுக்காக பெரிய அளவிலான நிலத்தை பாஜக அரசு ஒதுக்கிக் கொடுத்தது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார்.
டாடாவின் அறிமுகம்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இந்திய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக ராடியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதுதான் ராடியாவின் செல்வாக்கு குறித்து ரத்தன் டாடாவுக்கு தெரிய வந்து, அவர்களுக்கிடையே அறிமுகம் ஏற்பட்டது. டாடா குழுமத்துடன் ராடியா நெருக்கமாக ஆரம்பித்த பின்னர் எனக்கும், ராடியாவுக்கும் இடையிலான உறவில் சரிவு ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஜூரிச் வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தால்தான். எனக்கு ராடியா ரூ.1.2 கோடி பணம் தர வேண்டியிருந்தது. ஆனால் அவர் தரவில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பணத்தை எடுத்து வருவதில் சிக்கல் இருப்பதாக கூறினார் ராடியா. ஆனால் அது உண்மையில்லை என்பது எனக்குத் தெரியும்.
எனக்குப் பணம் தராமல் இழுத்தடித்த ராடியா, தனது பணத்திலிருந்து ஒரு பகுதியை ஒரு பாஜக தலைவருக்குக் கொடுத்தார். அதிகார பேரம் தவிர ஹவாலா, பண மோசடி ஆகியவற்றையும் செய்து வந்தார் ராடியா. இவ்வாறு கூறியுள்ளார் சிங்.
அனந்த்குமாரை நான் அறிமுகப்படுத்தவில்லை-சுவாமிகள்:
இதற்கிடையே கர்நாடகத்தி்ன் பெஜாவர் மடாதிபதி விஸ்வதீர்த்த சுவாமிகள் தான் ராடியாவை, அனந்த்குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக ஒரு சர்ச்சை நிலவுகிறது. ஆனால் இதை சுவாமிகள் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீரா ராடியா விவகாரத்தில் தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துள்ளனர்.
நான் அனந்த்குமாருக்கு ராடியாவை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. எனது சிஷ்யர்கள் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார் ராடியா.மற்றபடி எந்த அரசியல் கட்சி சார்பிலும் அவர் எனக்கு அறிமுகமாகவில்லை. டெல்லியில் வசந்த் கன்ச் பகுதியில் உள்ள நிலம், ராடியாவின் அறக்கட்டளைக்குத் தொடர்பானதல்ல. அந்த நிலம் என்னுடையதாகும். அது ராம விட்டலா சிக்ஷன சேவா சமிதிக்கு உரித்தானதாகும். இந்த சமிதி பதிவு செய்யப்பட்டதாகும். நான் அந்த சமிதியின் தலைவராக உள்ளேன். அதில் அரை ஏக்கர் நிலம், பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலம், தேவெ கெளடா பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டதாகும்.
சமிதியின் அடிக்கல் நாட்டு விழாவில் அப்போது துணை முதல்வராக இருந்த அத்வானி மட்டுமல்ல, டெல்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராடியா அழைத்து அவர்கள் வரவில்லை. மாறாக, நான் அழைத்துதான் வந்தனர்.
அனைத்துக் கட்சியிலும் எனக்கு ஆதரவாளர்கள், விசுவாசிகள் உள்ளனர். நான் டெல்லியில் பெற்ற நிலம் உரிய முறைப்படி, சட்டத்திற்கு உட்பட்டே வாங்கியதாகும் என்று கூறியுள்ளார் விஸ்வதீர்த்தர்
0 comments:
கருத்துரையிடுக