ஞாயிறு, 16 ஜனவரி, 2011

துபாய்யில் சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது.

துபாய்,ஜன.16:பள்ளிக்கூடம் செல்லும் பேருந்தில் வைத்து 4 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்த காம வெறிப்பிடித்த 3 இந்தியர்களை துபாய் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
துபாய் நாத்-அல்-ஷீபாவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் இந்தியாவைச் சார்ந்த சிறுமி கல்வி பயின்று வந்துள்ளார். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடைகளை அவரது தாயார் மாற்றியபொழுது இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்வாஸல் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் அவரது தாயார். பின்னர் என்னவோ ஏதோ என பயந்து இந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிறுமியை காண்பித்துள்ளனர். அப்பொழுது டாக்டர், சிறுமியை பரிசோதித்துவிட்டு, சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார் பர்துபாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பள்ளி சென்று வந்த பஸ்ஸின் ஓட்டுநர், க்ளீனர், அட்டெண்டர் ஆகியோர்தான் வெறிப்பிடித்து இத்தகைய அக்கிரமமான குற்றத்தை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைதுச் செய்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த காம வெறிபிடித்தவர்கள் மேலும் எவரையேனும் இத்தகைய பாதக செயலுக்கு ஆட்படுத்தியுள்ளனரா? என்பதுக் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த பாதகச் செயலை நடத்தியவர்கள் சமூகத்தின் வைரஸ்கள் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்பான் அல் தமீமி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூட நிர்வாகிகள் இந்த தவறு நிகழ்ந்ததற்கு காரணமான பொறுப்பிலிருந்து தப்பிக்கவியலாது. ஒரு பெண் பணியாளரை பேருந்தில் நியமிக்காதது பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும். இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தாஹி கல்பான் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளிக்கூட நிர்வாகிகள்தான் என துபாய் போலீஸ் துணைத்தலைவர் மேஜர் ஜெனரல் கமீஸ் மதார் தெரிவித்துள்ளார். சிறுமிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல 3 ஆண் பணியாளர்களை நியமித்தது அறிவுக்கு பொருந்தாது என அவர் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் நிகழும்பொழுது உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு துபாய் போலீஸ் குற்றவியல் புலனாய்வு தலைவர் மேஜர் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

கருத்துரையிடுக