சனி, 15 ஜனவரி, 2011
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர் கறுப்பு பணம் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்? - சுப்ரீம்கோர்ட்
“வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்?“ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
‘வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கோரி பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது.
நீதிபதி சுதர்சன் ரெட்டி, நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, “ஜெர்மனியில் உள்ள லீசென்ஸ்டீன் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் பல நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்து கணக்கு விவரமும் கிடைத்துள்ளது. எனினும், அவற்றை வெளியிட மத்திய அரசு விரும்பவில்லை‘ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எந்த முன்னுரிமை அடிப்படையில் அந்த தகவல்களை வெளியிட அரசு விரும்பவில்லை. கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது. அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருப்பது ஏன்“ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “மத்திய அரசிடம் உத்தரவு பெற்று இதுகுறித்து பதில் அளிக்கிறோம்“ என்று சொலிசிடர் ஜெனரல் அவகாசம் கேட்டார். நீதிபதிகள் கூறுகையில், “வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளது, வரி ஏய்ப்பு பிரச்னை மட்டுமல்ல. தவிர இதில் பல்வேறு பிரச்னைகள் அடங்கி உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக