வெள்ளி, 14 ஜனவரி, 2011

விரைவில் சென்னை - குமரி கப்பல் போக்குவரத்து! - ஜி கே வாசன்.

சென்னை - கன்னியாகுமரி இடையே புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
2011 முதல் 2020-ம் ஆண்டு வரை கடைப்பிடிக்க வேண்டிய தேசிய கடல்சார் கொள்கை வெளியீட்டுவிழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்துறை மந்திரி ஜி.கே.வாசன் கலந்துகொண்டு தேசிய கடல்சார் கொள்கையை வெளியிட்டார். விழா முடிவடைந்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய கடல்சார் கொள்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலங்கரை விளக்கங்கள் அழகுபடுத்தப்படும். சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கலங்கரை விளக்கமும் மாமல்லபுரத்தில் தேசிய கடல்சார் அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.
கடல்சார் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் கடல்சார் வளர்ச்சிக்குழு, இந்திய சர்வதேச துறைமுகக்குழு, கடல்சார் நிதிக்கழகம், ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தூத்துக்குடி - கொழும்பு இடையே முதல்முறையாக கப்பல் போக்குவரத்து திட்டத்தை தொடங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் அந்த திட்டம் செயல்வடிவம் பெறும். இந்த திட்டத்தைத் தொடர்ந்து, உள்நாட்டு கடல்வழி பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் - ராமேசுவரம் - கன்னியாகுமரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலைவை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும்," என்றார்.

0 comments:

கருத்துரையிடுக