வெள்ளி, 14 ஜனவரி, 2011
பள்ளிகளில் சினிமா பாடலுக்கு ஆட தடை விதிக்க வேண்டும்-ராமதாஸ்
பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத வேறுபாடு இன்றி பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,இங்கே கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டிருக்கிறது. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இந்த போராட்டத்திற்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும். நானே நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.
விழாவில் கிருஷ்ணமூர்த்தி ஆதீனம், கத்தோலிக்க பேராயர் சின்னப்பா, இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம், ஆலிம்புதுப்பேட்டை பள்ளிவாசல் தாஜீதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக