ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

கறுப்புப் பணத்தைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்குவதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளில் கறுப்பு பணமாக இருக்கிறது. வரி ஏய்ப்பு, சட்ட விரோத முதலீடு மூலம் கறுப்பு பணம் வெளிநாடுகளில் குவிந்து வருகிறது. இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வராதது ஏன் என்றும், இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் உச்சநீதி மன்றம் மத்திய அரசை நெருக்கி வருகிறது.
இதன் எதிரொலியாக ஊழல் மூலம் வெளிநாடுகளில் கறுப்பு பணம் செல்வதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவிருக்கிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய மந்திரிகள் குழு ஆய்வு செய்தது. வெளிநாடுகளில் குவிந்து வரும் கறுப்பு பணம் தொடர்பாக ஐக்கிய நாட்டு சபையுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்படுகிறது.
ஊழல் தடுப்பு தொடர்பான இந்த புதிய சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் ஏற்கெனவே வருமான வரித்துறை சட்டம் திருத்தப்பட்டு, இனி வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்துக்கும் வரி விதிப்பு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக