சனி, 12 மார்ச், 2011
குமரி மாவட்டத்திலேயே குளச்சலில் தான் பதட்டமான வாக்குச்சாவடிகள் அதிகம்
குமரி மாவட்டத்திலேயே குளச்சலில் தான் பதட்டமான வாக்குச்சாவடிகள் அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு குழுக்களை அமைத்துள்ளனர். பறக்கும்படை தேர்தல் கண்காணிப்பு குழு உள்பட பல குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 100க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் குமரி மாவட்டம் வந்துள்ளனர். அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி பதட்டமான வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த தேர்தல்களில் பிரச்சனை ஏற்பட்ட பகுதிகள், சாதி, மத ரீதியாக பிரச்சனை ஏற்பட்ட பகுதிகள், கட்சிகள் ரீதியாக பிரச்சனைக்குரிய பகுதிகள் என பட்டியல் தயாரானது. இதில் மொத்தம் உள்ள ஆயிரத்து 410 வாக்குச்சாவடிகளில் 266 பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக குளச்சல் தொகுதியில் 66 வாக்குச்சாவடிகள், கிள்ளியூரில் 62, நாகர்கோவிலில் 56, கன்னியாகுமரியில் 37, பத்மநாபபுரத்தில் 27, விளவங்கோடியில் 18 வாக்குசாவடிகளும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரவுள்ள துணை ராணுவப் படையினரை இந்த வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக