சனி, 7 மே, 2011
தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி; நிதி நிறுவன அதிபர் கைது.
தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் ஸ்டீபன் (வயது 59). இவர் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி மூலச்சல் காட்டுவிளையை சேர்ந்த ஓய்வு பெற்ற பாஸ்டரான கிறிஸ்டோபர் லெவி (68) ஸ்டீபன் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்தார். டெபாசிட் காலம் முடிந்த பிறகும் ஸ்டீபன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காததை அடுத்து கிறிஸ்டோபர் லெவி, நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் டி.எஸ்.பி. மறைமலை, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஸ்டீபன் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி லெற்றிஷியா கிரேஷில்டா (58) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்டீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரது மனைவி லெற்றிஷியா கிரேஷில்டா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஸ்டீபனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டீபன் அந்த பகுதியை சேர்ந்த மேலும் சிலரிடம் அவர் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொருளாதார பிரிவு டி.எஸ்.பி. மறைமலை கூறியதாவது:- தற்போது கைது செய்யப்பட்டு உள்ள ஸ்டீபன் ரூ.20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஸ்டீபன் நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் ஆஜராகி புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக