சனி, 7 மே, 2011
பத்து நாட்கள் 'படுத்திய' ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் வாபஸ்!
மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானிகள் வேலைக்கு திரும்பினார்கள். ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கிடையே சீரான சம ஊதியம், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதைத் தொடர்ந்து 7 விமானிகள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். 6 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்திய வர்த்தக விமானிகள் (ஐ.சி.பி.ஏ.) சங்கத்தின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்தது. மேலும் இந்த வேலைநிறுத்தத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், விமானிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கும், விமானிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரவு 10 மணி்க்கு உடன்பாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, விமானிகள் கடந்த 10 நாட்களாக நடத்தி வந்த தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.பிந்தர் நிருபர்களிடம் கூறுகையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தங்கள் சங்கத்துக்கு மீண்டும் அங்கீகாரத்தை வழங்கவும், பணி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட அனைத்து விமானிகளையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள அரசு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் 800-க்கும் அதிகமான விமானிகள் இரவு முதல் வேலைக்கு திரும்புவதாகவும் கூறினார்.
அரசாங்கத்தின் யோசனையை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதற்காக விமானிகளுக்கு நன்றி தெரிவித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி, விமானிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து 3 பேர் கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றார்.

0 comments:
கருத்துரையிடுக