ஞாயிறு, 29 மே, 2011
ரூ. 2,400 கோடி கடன் பாக்கி: பெட்ரோல் சப்ளை நிறுத்தம்; ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்திய விமானங்களுக்கு பெட்ரோல் வழங்கி வருகின்றன. இந்த எண்ணை நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வழங்க வேண்டிய கடன் பாக்கி ரூ. 2400 கோடியாக உள்ளது. இதனால் கடன் தொகையை செலுத்தினால் மட்டுமே பெட்ரோல் வழங்க முடியும் என்று 3 எண்ணை நிறுவனங்களும் தெரிவித்து விட்டன. இதனால் ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர் இந்தியா தினசரி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மொத்தம் 320 விமான சேவையை இயக்குகிறது. எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் அளிக்க மறுத்ததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் 6 ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் கூடுதலாக எரிபொருளை நிரப்பிக் கொண்டு இந்தியா வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்து இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள்.
இதையடுத்து தினசரி வாங்கும் பெட்ரோலுக்கு உரிய தொகையை செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஏர் இந்தியா ரூ. 13.5 கோடிக்கு விமான எரிபொருளை கொள்முதல் செய்கிறது. இந்த தொகை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததால் மேலும் அதிகரித்தது. இதனால் கூடுதல் தொகையை ஏர் இந்தியாவால் செலுத்த முடியவில்லை.
வேறு இடங்களில் இருந்து எரிபொருள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், எவ்விதபாதிப்பும் இன்றி விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா சேவையை பயன்படுத்திய வகையில் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 450 கோடி அளிக்க வேண்டியுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்த வகையில் செலுத்த வேண்டிய தொகை ரூ. 344 கோடியாகும். இது பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டிய தொகையாகும்.
வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை ரூ. 106 கோடி பாக்கி வைத்துள்ளது. இது லிபியாவில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்ததற்கான செலவு ஆகும்.

0 comments:
கருத்துரையிடுக