புதன், 4 மே, 2011

இருதயநோய் ஓர் ஆய்வு

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாட்டில் பிறந்தவர்களுக்கு மேலை நாட்டினரை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது. இத்தகையவர்கள் அவரவர் சொந்த நாட்டில் வசித்தாலும் சரி அல்லது தெற்காசியர்களை மூதாதையர்களாக கொண்டிருந்தாலும் சரி இருதய நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளன. குறிப்பிட்டு சொல்லப்போனால் 100க்கு 10 முதல் 12 பேரை இந்த கொடிய நோய் தாக்கி வருகிறது. மேலை நாட்டவர்களை ஒப்பிடும் போது, நம்மவர்களில் மாமிசம் சாப்பிடுவோர் குறைவு. புகைப்பிடிப்பவர்கள் குறைவு. ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் குறைவு. இப்படி இருந்தும் நம்மவர்களை இந்த கொடிய நோய் அதிக அளவில் தாக்கி வருகிறது.

நமக்கே உரித்தான மரபு அணுக்கள் மூலமும், அதிக அளவில் மாவுச் சத்து (அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு) உணவை உண்பதாலும் நம்மிடையே நன்மை பயக்கும் உயர் அடர்த்தி (எச்டிஎல்) கொலஸ்டிரால் அளவு குறைந்தும், டிரைகிளிசரைட் கொழுப்பு அளவு கூடியும் காணப்படுவதால், இருதய நோய் அதிக அளவில் நம்மைப் பாதிப்பதுடன், மிக இளம் வயதிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது

நமது நாட்டினரை பொறுத்தமட்டில், குறை அடர்த்தி (எல்டிஎல்) கொலஸ்டிரால் கூடியிருப்பதன் மூலம் இருதய நோய் வருவதை விட, குறைவான அளவு எச்டிஎல் கொலஸ்டிரால் இருப்பதால் இருதய நோய் வரும் வாய்ப்பே அதிகம். நம்மிடையே பெரும்பாலானவர்களுக்கு உயர் அடர்த்தி கொழுப்பு 40 மில்லி கிராமுக்கு கீழ்தான் உள்ளது. அதிக உடல் எடை, குறைவான தேகப் பயிற்சி, உடல் உழைப்பின்மை, புகைப்பிடித்தல் மற்றும் அதிகமாக உண்ணும் பழக்கம் போன்ற தவறான வாழ்க்கை முறைகள் இதற்கு காரணமாகின்றன. இதுமட்டுமின்றி, நம்மிடையே வெகுவாகக் காணப்படும் வயிற்றை சுற்றிப் போடும் சதையிலும், சர்க்கரை நோய் வரும் சாத்தியமும், இருதய நோய் வரும் சாத்தியமும் அதிகமாகிறது.

நமக்கு உயர் அடர்த்தி கொலஸ்டிரால் 45 மி.கிராமுக்கு மேலாகாவும், டிரைகிளிசரைட் கொழுப்பு 130 மி.கிராமுக்கு குறைவாகவும், குறை அடர்த்தி கொலஸ்டிரால் 100 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் எந்த வயதினருக்கும் 120/80 முதல் 130/85 மி.மீ.க்குள் இருக்க வேண்டும். உடல் "எடை & உயரம் விகிதம்" (எடை/கி.கி.)/உயரம்(மீ)2) 23க்கு கீழ் இருத்தல் நல்லது. நமது இடுப்பு சுற்றளவு 90 செ.மீட்டருக்குக் (பெண்களுக்கு 80 செ.மீ.,) குறைவாக இருக்க வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக