வெள்ளி, 6 மே, 2011
என்டோசல்பான் தடை குறித்து பரிசீலனை: கருணாநிதி
என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்குத் தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில், 'என்டோசல்பான்' எனும் பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில், முந்திரித் தோட்டங்களில் பூச்சிகளை ஒழிப்பதற்காக என்டோசல்பான் மருந்து பயன்படுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி, மரணம் அடைந்தனர். எனவே, கேரள அரசு இந்த மருந்தை தடை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்திய நாடு முழுதும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றத்திலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், இந்தப் பூச்சிமருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. ஜெர்மனி, சுவீடன், ஆஸ்ட்ரேலியா, இந்தோனேசியா, கனடா போன்ற 81 நாடுகள் இந்த மருந்துக்கு தடை விதித்துள்ளன. தமிழகத்திலும், சில விவசாய சங்கங்கள் என்டோசல்பானை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
என்டோசல்பான், 1950களில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பயிர்களில், பூச்சிகளை அழிக்க வல்லதாகும். பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, மிளகாய், தேயிலை ஆகியவற்றில் பரவும் 'அசுவினி' என்ற பூச்சியையும்; பருத்தி, தேயிலை ஆகியவற்றில் பரவும் `இலைப்பேன்' என்ற பூச்சியையும்; நெல் பயிரில் பரவும் `இலைசுருட்டுப் புழு' என்ற பூச்சியையும்; கட்டுப்படுத்துவதற்கு சாதாரணமாக என்டோசல்பான் மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. 2011, ஏப்ரல் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தினை தடை செய்வதற்கு ஒருமனதான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக, இந்தப் பூச்சிமருந்தின் நச்சுத்தன்மை குறைவாகவே உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து; என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்குத் தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து தகுந்த பரிந்துரைகளைப் பெற்று; முடிவெடுத்துச் செயல்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதன் அளவு உயர்ந்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவது 20 சதவிகித அளவுக்கு உயர்ந்திருப்பதாக, 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆய்வு, 2005-2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவது, 27 சதவிகிதத்திலிருந்து 47.3 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வும், விழிப்புணர்வும் வரவேற்கத்தக்கதாகும்.
அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டுமென்று 2005ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டபூர்வமாக அறிவித்ததற்குப் பிறகு, அயோடின் கலந்த உப்பின் உற்பத்தி 48 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 57 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.
அயோடின் குறைபாடுதான் மூளைச் சிதைவுக்குக் காரணம். அயோடின் குறைவாக உள்ள பகுதிகளில் பிறந்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 13.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும், 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் அயோடின் குறைபாடு காரணமாக மூளை பாதிப்புடன் பிறக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோடின் கலந்த உப்பின் அருமையை அறிந்ததால்தான், 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, கழகத்தின் தேர்தல் அறிக்கையில், ''பொது விநியோகத் திட்டத்தின்கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்'' என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது. அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவது படிப்படியாகப் பரவி, அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக