வெள்ளி, 6 மே, 2011
தனியார் விமானங்களை பயன்படுத்த திட்டம்: பைலட் ஸ்டிரைக்கால் ஏர்-இந்தியா ஏற்பாடு
பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்தினால், பயணிகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, 18 தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை ஏர்-இந்தியா நிறுவனம் செய்துள்ளது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்தினால், பயணிகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக ஏர்-இந்தியா நிறுவனம், கிங்பிஷர், ஏர்-அரேபியா போன்ற தனியார் நிறுவனங்களின், 18 விமானங்களை வாடகைக்கு எடுத்து பயணிகளுக்கு உதவி வருகிறது. இதில் 16 விமானங்கள், உள்நாட்டு போக்குவரத்திற்கும், இரண்டு விமானங்கள் சர்வதேச போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில், நான்கு மெட்ரோ நகரங்களில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் 12 ஆயிரம் பயணிகள் பயனடைவர். மேலும், பயணிகளுக்கு உதவும் வகையில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் செல்லும் பயணம் நல்ல முறையில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில், "டிரான்ஸ்பர் டெஸ்க்' திறக்கப்பட்டு, சர்வதேச பயணிகள் விமானங்களை மாற்றி பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் உள்ள அலுவலகங்களில் 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 24 மணி நேரமும் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கால்சென்டர்கள் மூலமாகவும், விமான பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் தரப்படுகின்றன. பயணம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஓட்டலில் தங்கவும், உணவு பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பயணம் செய்ய மாற்று விமான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வர வாய்ப்பு: சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஏர்-இந்தியா விமான பைலட்கள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. கடந்த ஒன்பது நாள் போராட்டத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர்-இந்தியா நிறுவன பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பதாவது நாளாக நேற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானதால் பயணிகள் கடும் அவதியுற்றனர். பைலட்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்ற கொள்கையை கடைபிடிக்கப் போவதாக ஏர்-இந்தியா அறிவித்தது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு சுற்றுகள் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பைலட்கள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். குறிப்பாக போராட்டக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட, டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஏர்-இந்தியா நிறுவனம் இதில் பிடிவாதம் பிடிப்பதால், பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போகிறது. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது பைலட்களுக்கு கோர்ட்டை அவமதித்ததாக டில்லி ஐகோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவும் சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
நேற்று, ஏர்-இந்தியா விமானங்கள் 10 சதவீதம் மட்டுமே இயக்க முடிந்தது. தனியார் விமான நிறுவனங்களோடு சேர்ந்து நிலைமையை சமாளிக்க முயன்றனர். இந்நிலையில், இன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பெரும்பாலும் உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிற

0 comments:
கருத்துரையிடுக