சனி, 27 ஆகஸ்ட், 2011

இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ

இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்குமே பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று மாலை இப்தார் விருந்து நடந்தது. அதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், எனது அழைப்பை ஏற்று இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. 1999ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அ.திமுக சார்பில் ரமலான் புனித மாதத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே இந்த ஆண்டும் இந்த இனிய நிகழ்ச்சியை கட்சி சார்பில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த ஆண்டும் இதைப் போலவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சார்பில் நடத்தினேன். அப்போது, தேர்தல் வருகிறது, எனவே இஸ்லாமிய பெருமக்களின் வாக்கைப் பெறுவதற்காக இதை நடத்துகிறார் என்று திமுக தலைவர் அன்றைக்கு சொன்னார். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அதிமுக அரசு என்றைக்குமே இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்ற உத்தரவாதத்தை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.
நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் விளங்கட்டும், அவர்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.அடுத்த ஆண்டு இதைப் போலவே மீண்டும் ரமலான் புனித மாதம் வருகிறபோது, நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்றார் முதல்வர்.
தட்ஸ்தமிழ்

0 comments:

கருத்துரையிடுக