ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
10ம் வகுப்பு தேர்வு ரத்து இல்லை : கபில் சிபல் விளக்கம்
மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய சொல்லவில்லை. மாநில அரசுகள் அவற்றின் விருப்பபடி கல்வித் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறினார். ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் அருகில் உள்ள கோரக்புட் என்ற இடத்தில் புதிதாக மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பல்கலைக்கழகத்தை தொடக்கி வைத்தபின் நிருபர்களுக்கு கபில் சிபல் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் மத்திய, மாநில கல்வி வாரியங்களின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் யோசனைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கிரேடு முறையை அமல்படுத்த எதிர்ப்பு இல்லை. எனவே மத்திய பள்ளிக் கல்வி நிறுவனங்களில் 2009&10ம் கல்வி ஆண்டு முதல் கிரேடு முறை அமல்படுத்தப்படும். அதேசமயம் மாநில அரசுகள் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சொல்லவில்லை. மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி பாடத் திட்டங்களை தயாரித்து, தேர்வுகளை நடத்தலாம். இவ்வாறு மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
Labels:
அரசு,
கபில் சிபல்,
தேர்வு
0 comments:
கருத்துரையிடுக