வியாழன், 27 ஆகஸ்ட், 2009
படேலை விமர்சி்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி நூலை கண்டுகொள்ளாத மோடி
சர்தார் வல்லபாய் படேலை கேவலப்படுத்தி விட்டார் ஜஸ்வந்த் சிங் என்று கூறி ஜின்னா குறித்த அவரது நூலை வேகமாக தடை செய்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி, படேலை விமர்சித்து எழுதிய நூலை இதுவரை தடை செய்யாமல் உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சேஷாத்ரியும் தனது நூலில் பிரிவினைக்கு படேல்தான் காரணம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நூல், குஜராத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வைத்தே விற்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் மோடிக்குத் தெரியாது என்று கூற முடியாது. காரணம், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அடிக்கடி போய் வருபவர் மோடி. 1967ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ்.ஸில் பிரசாரக் ஆக இருந்தவர் மோடி. அதே கட்டட வளாகத்தில்தான் படேல் குறித்த சேஷாத்ரியின் நூலும் விற்கப்பட்டது. 1982ம் ஆண்டு இந்த நூல் வெளியானது.
The Tragic Story of Partition என்று பெயரிடப்பட்ட அந்த நூலில், நேருவையும், படேலையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் சேஷாத்ரி. இரு தலைவர்களும்தான் பிரிவினைக்குக் காரணம் என்றும் அவர் விளாசியுள்ளார். இதையேதான் தனது நூலிலும் ஜஸ்வந்த் சிங் விலாவாரியாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேஷாத்ரி எழுதிய நூலின் விலை ரூ. 100 ஆகும். இந்தப் புத்தகம் இன்று வரை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள சாஹித்ய சாதனா அறக்கட்டளையில் விற்பனையில் உள்ளது.
இந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் நூலை மட்டும் தடை செய்து விட்டு சேஷாத்ரியின் நூலை கண்டு கொள்ளாமல் விட்டிருப்பதால் சட்ட சிக்கல்கள் வந்து விடக் கூடாது என்று சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மோடி ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
புத்தகத் தடையை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் விரைவில் கோர்ட்டை நாடவுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
அப்படி அவர் கோர்ட்டுக்குப் போனார் சேஷாத்ரி நூலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை முக்கிய வாதமாக ஜஸ்வந்த் சிங் தரப்பு வைக்கக் கூடும்.
கடந்த 27 ஆண்டுகளாக சேஷாத்ரியின் நூல் குஜராத்தில் விற்பனையில் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
சேஷாத்ரியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...
1947ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அதிகார மாற்றத் திட்டம் குறித்து மெளன்ட் பேட்டன் அறிவித்தபோது அது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தியாவை இரண்டாகப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்கும் அந்தத் திட்டத்திற்கு நேருவும், படேலும் அனுமதி அளித்திருந்தனர்.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிஸ் கட்சியின் நம்பிக்கை வாய்ந்த தலைவர்கள் மீறி விட்டனர். இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்திருந்தனர்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்தவை, நாட்டுக்கு ஆற்றப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கை மோசடியாகும். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து தங்களது இன்னுயிரை நீத்த எண்ணற்ற தேசபக்தர்களின் கனவுகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
இதயத்தில் அகண்ட பாரதம் என்ற கனவை சுமந்திருந்த அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
Labels:
நரேந்திர மோடி,
RSS
0 comments:
கருத்துரையிடுக