செவ்வாய், 27 அக்டோபர், 2009

1200 அரசு பணியிடங்களுக்கு நவம்பரில் குரூப்1 தேர்வு

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பணிகளுக்கு வரும் நவம்பரில் இருந்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் காசிவிஸ்வநாதன் கூறினார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் போட்டித் தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட காசி விஸ்வ நாதன் நிருபர்களிடம் நேற்று கூறியது: 
அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஓராண்டாக 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போட்டித்தேர்வு குறித்து பேசி வருகிறேன். வரும் நவம்பர் மாதம் 1,200 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும். வனத்துறை ரேஞ்சர் பணிக்கு 70 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு பட்டம் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். குரூப் 2 தேர்வுகளை எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் எழுத முடியும். 
பட்ட மேற்படிப்புகள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே பயன்படும். அரசு வேலைக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயமாக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். விடைத்தாள் வெளிப்படையாக திருத்தப்படுவதால் தங்கள் விடைத்தாள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காசிவிஸ்வநாதன் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக