ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஏப்ரல், 2010

ஹஜ் யாத்திரை செல்ல 30ம் தேதி கடைசி நாள்

ஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆண்டில் 25 ஆயிரம் பேருக்கு கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஹஜ் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கப்படமாட்டாது. ஹஜ் பயணக் குழுவில் வரும் யாத்திரீகர்கள் இனி அரசு மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

சனி, 5 டிசம்பர், 2009

417 ஹஜ் பயணிகள் சென்னை திரும்பினர்.


தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செய்தவர்களில் முதல் கட்டமாக 417 பேர் சென்னை திரும்பினர்.தமிழகம், புதுச்சேரியில் இருந்து 4,012 பேர் கடந்த அக்டோபர் மாதம் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். பக்ரீத் அன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 417 பேர், சவுதி அரேபியன் விமானத்தில் நேற்று காலை சென்னை வந்தனர்.அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மைதீன்கான் வரவேற்றார். உறவினர்களும் நண்பர்களும் கட்டித்தழுவி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.அமைச்சர் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதலாக ஹஜ் பயணிகள் சென்றனர்.இன்று முதல் 12ம் தேதி வரை 14 சிறப்பு விமானங்களில் ஹஜ் குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.ஹஜ் பயணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் வசதி செய்து கொடுக்கிறது என்றார்.

வியாழன், 12 நவம்பர், 2009

ஹஜ் பயணிகளுக்கு அடுத்தாண்டு மோனோ ரயில்

ஹஜ் பயணிகளின் வசதிக்காக அடுத்து ஆண்டு முதல் மோனோ ரயில்களை இயக்கவுள்ளது சவூதி அரேபிய அரசு. இந்த மோனோ ரயில் மக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிபா ஆகிய புனித் தலங்களை இணைக்கும். இதுகுறித்து சவூதி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹபீப் ஜயின் அல் அபிதின் கூறுகையில், இந்த மோனோ ரயில்கள் மூலம் புனித தலங்களுக்கு இடையே 5 லட்சம் ஹஜ் யாத்ரீகர்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த பயணம் 6 முதல் எட்டு மணி நேரங்களுக்குள் இருக்கும்.
இதன் மூலம் ஹஜ் சேவைக்காக இயக்கப்பட்டு வரும் 30 ஆயிரம் பெரிய மற்றும் சிறிய பேருந்துகள் அடியோடு வாபஸ் பெறப்படும். 6.75 பில்லியன் சவூதி ரியால் செலவில் இந்த மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஹஜ் யாத்ரீகர்களை நிர்வகிப்பதில் நிலவி வரும் பெரும் சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்ரீகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும். அடுத்த ஆண்டு முதல் கட்ட மோனோ ரயில் சேவை தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டு முழு அளவில் இந்த சேவை இயங்கும். இந்தத் திட்டம்வெற்றி அடைந்தால், புனிதத் தலங்கள் தவிர பிற இடங்களுக்கும் யாத்ரீகர்களை மோனோ ரயில் மூலம் அனுப்ப முடியும்.
இந்த மோனோ ரயில் திட்டத்தை மெக்காவில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்துடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதன் மூலம் மெக்காவையும் மதீனாவையும் இணைக்கும் ஹர்மெயின் ரயில்வே போக்குவரத்துடன் இந்த திட்டத்தை இணைக்க முடியும். இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி சவூதி மன்னர் அப்துல்லாவுக்கும், சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் இடையே கையெழுத்தானது.
புனிதத் தலங்களை இணைக்கும் வகையி்ல் ஐந்து மோனோ ரயில்களை இயக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் மோனோ ரயில் ஓடத் தொடங்கியதும், அடுத்த 2 மோனோ ரயில்களுக்கான பாதை 3 வருடங்களி்ல் முடிக்கப்படும். மீதமுள்ள 2 மோனோ ரயில் பாதை அதற்கடுத்த 3 ஆண்டுகளில் முடிவடையும். ஒரு மோனோ ரயில் பாதைப் பணிக்கு 4 பில்லியன் சவூதி ரியால் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதல் மோனோ ரயில் மினாவிலிருந்து தொடங்கும். இந்த ரயில் மூலம் 3.60 லட்சம் அரேபிய யாத்ரீகர்கள் உள்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் பயணிக்க முடியும். இந்த மோனோ ரயில் பாதை தரையிலிருந்து 8 முதல் 10 மீட்டர் உயரத்தில் அமையும். இதன் மூலம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றார்

திங்கள், 19 அக்டோபர், 2009

இந்த ஆண்டு 1.6 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை

இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 491 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தியர்களின் ஹஜ் யாத்திரை நாளை முதல் தொடங்குகிறது. முதல் பேட்ச் இந்திய யாத்ரீகர்கள் நாளை பயணமாகவுள்ளனர் என்று ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வரும் சீசன் என்பதால், சவூதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய யாத்ரீகர்களின் உடல் நிலையை கண்காணிக்க 10 இந்திய டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அக்டோபர் 10ம் தேதியே வந்து விட்டது. 
மேலும், மெக்காவில் இந்திய ஹஜ் குழுவின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையில் 2 தனி அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறி கொண்ட இந்தியப் பயணிகள் இதில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக 1,15,000 யாத்ரீகர்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,491 பயணிகள், தனியார் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவூதியா நிறுவனம் 115 விமான சேவையும், ஏர் இந்தியா 130, என்ஏஎஸ் ஏர் நிறுவனம் 96 விமான சேவையையும் இயக்கவுள்ளது

செவ்வாய், 13 அக்டோபர், 2009

தமிழக ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

மாநில சிறுபான்மையினர் மனித உரிமை கவுன்சில் தலைவர் மீரான் மைதீன் மத்திய அமைச்சர் அழகிரிக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழக ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு விமான சேவை அக்டோபர் 23ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை தொடர்கிறது. ஹஜ் யாத்திரையை முடித்து திரும்பும் பயணிகள் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகின்றனர். ஹஜ் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ரயில்களில் முன்பதிவு கிடைக்காமல் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக ஹஜ் பயணிகள் வசதிக்காக நாகர்கோவில், தஞ்கை, கோவை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். 

புதன், 7 அக்டோபர், 2009

தயாநிதி மாறன் பரிந்துரை ஏற்பு தமிழகத்தைச் சேர்ந்த 34 பேர் ஹஜ் பயணம்.

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தை சேர்ந்த 34 முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஹஜ் பய ணத்துக்கு மத்திய அரசு மானியமும் வழங்குகிறது.
தமிழகத்துக்கென ஒதுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் பட்டியலில், தங்கள் பெயரையும் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சென்னையை சேர்ந்த முஸ்தபா, காதர் உசேன், ஜெசிமா பாத்திமா, முகமது ஹாரிஸ் உட்பட 34 பேர் அணுகினர்.அவர்களது வயது மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஹஜ் பட்டியலில் இவர்களது பெயரை சேர்க்குமாறு வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கடந்த ஜூன் 26ம் தேதி பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று 34 பேருக்கும் ஹஜ் பயணம் செல்ல இப்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சனி, 26 செப்டம்பர், 2009

விண்ணப்பித்த அனைவருக்கு ஹஜ் பயண வாய்ப்பு: தேசிய லீக் வலியுறுத்தல்

 ஹஜ் பயணம் செல்வதற்காக தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தேசிய லீக் வலியுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக தேசிய லீக் தலைவர் பசீர் அகமது விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகையில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் உள்ளனர். ஆனால் மத்திய அரசு சரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் 15 கோடி முஸ்லிம் உள்ளதாக கூறுவதால் ஹஜ் பயணத்துக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் விசாக்களை மட்டுமே சவூதி அரசு வழங்குகிறது. 
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முஸ்லிம் கணக்கெடுப்பின் படி மத்திய அரசு ஹஜ் விசா தருகிறது. ஆனால் இன்றைய தமிழக மக்கள் தொகையில் 80 லட்சத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். 8 ஆயிரம் விசா தரவேண்டிய தமிழகத்திற்கு 3300 விசாதான் கிடைக்கிறது. ஆனால் கேரளாவுக்கு 13 ஆயிரம் விசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்?
எனவே தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். வக்ப் போர்டுக்கு சொந்தமான வீட்டுமனை விற்பனைக்கு குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு அவர்களின் விண்ணப்ப தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்

புதன், 2 செப்டம்பர், 2009

ஹஜ் ஒதுக்கீடு விதிகளில் மாற்றம்

ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கான ஒதுக்கீடு நடைமுறைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் ஒதுக்கீட்டில் வெளிப்படையான நடைமுறையைக் கடைபிடிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு (Tour Operators) ஹஜ் யாத்திரை முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு வழங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலா நிறுவனங்களுக்குரிய விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ள தகுதியான நிறுவனங்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் புதுடெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், ஹஜ் ஒதுக்கீட்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஹஜ் செல்ல வயது தடையில்லை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஹஜ்ஜுக்காக பயணத்தின் போது பன்றிக்காய்ச்சல் அபாயத்தால் 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளை சவூதி அரேபிய அரசு தடை செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய ஹஜ் குழுவிடம் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விளக்கம் கோரியது. ஹஜ் 2009ம் ஆண்டுக்காக வயது, பாலினம் குறித்து எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று சவூதி அரேபிய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஹஜ் டிக்கெட் ஒதுக்கீட்டில் மத்திய மந்திரி முறைகேடு செய்ததாக பிரதமரிடம் பரபரப்பு புகார்

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேர் ஹஜ் புனிதப் பயணத்துக்கு வரலாம் என்று இந்தியாவுக்கு சவூதி அரேபியா அறிவித்தது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் முஸ்லிம்கள் மாநில ஹஜ் கமிட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்றனர்.
47 ஆயிரம் பேரை அழைத்துச் செல்லும் பொறுப்பு தனியார் டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் டூர் ஆபரேட்டர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்களை அழைத்து செல்வதற்கு என்றே இந்தியாவில் ஏராளமான டிராவல் ஏஜென்சிகள் உள்ளன.
இந்த ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு ஹஜ் பயணிகளை அழைத்து செல்லலாம் என்ற ஒதுக்கீடு முறை உள்ளது. சவூதி அரேபிய அரசு தன் வழிக்காட்டி பட்டியலில், “டூர் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் 600 பேர் வரை அழைத்து வர அனுமதி கொடுக்கலாம்” என்று கூறியுள்ளது. இந்த விதி மீறப்பட்டுள்ளது.
தனியார் டூர் ஆபரேட்டர்களுக்கு ஹஜ் புனித பயணத்துக்கான டிக்கெட் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் பயண தனியார் டூர் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 155 டிக்கெட்டுக்களே அனுமதிக்கப்பட்டன.
ஆனால் அல்ஹிந்த் டிராவல்சுக்கு மட்டும் 1700 டிக்கெட் ஒதுக்கீடு வாரி வழங்கப்பட்டது. கேரளாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த டிராவல்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதன் மூலம் இந்த டிராவல்ஸ் நிறுவனம் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் கூடுதலாக 30 சதவீதம் வரை பணம் சம்பாதித்து முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி இ.அகமதுவுக்கும், அல்ஹிந்த் டிராவல்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அகமது தன் செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் டிக்கெட் ஒதுக்கீட்டை அல்ஹிந்த் டிராவல்சுக்கு பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியின்போது இ.அகமது வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்தார். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவரான அவர் மலப்புரம் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 6 தடவை எம்.பி. ஆக தேர்வானவர்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள அவர் தலையீட் டினால் ஹஜ் பயணிகள் தேர்விலும் குழப்பம் ஏற் பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், முஸ்லிம்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஹஜ் பயணிகள் தேர்வாகிறார்கள். ஆனால் கடந்த ஆண்டு அகமது தலையீட்டினால் பாரபட்சமான சூழ்நிலை உருவானது. 3.3 கோடி முஸ்லிம்கள் வசிக்கும் உத்தரபிரதேசத்தில் இருந்து 1440 ஹஜ் பயணிகளே தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் 75 லட்சம் முஸ்லிம்களே வசிக்கும் கேரளாவில் இருந்து 9 ஆயிரத்து 245 பேர் ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தனியார் டிராவல்சில் செல்ல வைத்து முறைகேடு நடந்துள்ளது.
அகமதுவின் இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாராளுமன்ற மேல்சபை துணைத் தலைவர் ரஹ்மான் கான் தலைமையில் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் பர பரப்பு புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஹஜ் பயண நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யவும், தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு டிக்கெட் ஒதுக்கீட்டை வரை முறைப்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹஜ் பயணிகள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி - தமிழக அரசு

சவூதி அரேபியாவுக்கு செல்லும் ஹஜ் பயணிகள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தகுந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகொள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா.அலாவுதீன் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர், ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளுக்கு சவூதி அரசு, தடை எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக சில நிபந்தனைகளை சவூதி அரசு விதித்துள்ளதாக அலாவுதீன் கூறினார். இதன்படி இவ்வாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பருவகால புளூ காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டதற்கான தகுந்த தடுப்பூசி சான்றிதழை ஹஜ் விசா பெறுவதற்கு இருவாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.நாட்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இவ்வாண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை அவரவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அலாவுதீன் கூறினார்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

ஸ்வைன் ப்ளூ: ஹஜ் யாத்ரீகர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்- சவூதி உத்தரவு

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மேலும், தத்தமது நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சான்றிதழ்களையும் யாத்ரீகர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் 12 வயதுக்குட்பட்டோரையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அனுமதிப்பதில்லை என்றும் சவூதி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த தடை காரணமாக இந்திய ஹஜ் கமிட்டி பல்வேறு நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.

அதன்படி காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உடையோரை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பாமல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வருகிற 29ம் தேதி விவாதிக்கவுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாத்திரை செல்ல விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் மருத்துவ சான்றிதழ் அளிக்கவும், தடுப்பு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கென பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. டாமிப்ளூ மாத்திரை மட்டுமே உள்ளது. அதையே தடுப்பு மருந்தாக கொடுக்கப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவி்ல்லை.

--oneindia.in

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம்: சசி தரூர்

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர் கூறியிருக்கிறார்.


உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு இந்த முறை கூறிவிட்டதால், ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் என்று அவர் கூறினார்.

இதுவரை ஹஜ் பயணிகள் சிறப்பு யாத்ரிகர் அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தனர். ஆனால் இந்த முறை பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று அந்நாட்டு அரசு கோரி விட்டதாக தெற்கு மற்றும் மேற்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசி தரூர் கூறினார்.

பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கான சிறப்பு பாஸ்போர் பெறுவதற்கான தேதி ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டபோதிலும், இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு சசி தரூர் கேட்டுக் கொண்டார்.

சிறப்பு பாஸ்போர்ட் 8 மாத காலத்திற்கு செல்லுபடியாகக் கூடியது.